'அண்ணா' படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவே இல்லையே ; அதிர்ச்சி தரும் அரவிந்த்சாமி
சமீபத்தில் நிவின்பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தில் 'யவன கதையில் இருந்து வந்த இதயக்கனி' என்கிற ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. ஆனால் இது 1996ல் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவாக இருந்த 'அண்ணா' என்கிற படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் என்பது பின்னர் தெரிய வந்தது. இந்த படத்தை இயக்குனர் ஜோஷி இயக்கத் தொடங்கினார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் அப்போது கைவிடப்பட்டது என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் கதையை பிரபல புலி முருகன் தயாரிப்பாளர் தோமிச்சன் முலக்குப்பாடம் என்பவர் வாங்கியுள்ளதாகவும் இந்த நவீன காலத்துக்கு ஏற்றவாறு நட்சத்திரங்களை வைத்து நடிக்க வைக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால் சமீபத்தில் நடிகர் அரவிந்த்சாமி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இது பற்றி கேட்டபோது, “நான் எப்போதுமே அண்ணா என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே இல்லை. அந்த படத்தின் கதையை கூட நான் கேட்டதில்லை. என் பெயரில் யார் அந்த படக்குழுவை தொடர்பு கொண்டார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அப்போது சினிமா துறைக்கு புதியவன். நானாக நடிப்பதாக அவர்கள் எப்படி நினைத்துக் கொண்டார்கள் என்றும் தெரியவில்லை. அந்த படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் அப்போது அறிவிக்கப்பட்ட காலத்தில் அரவிந்த்சாமியின் உருவப்படங்கள் பொறித்த ஆடியோ கேசட்டுகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.