உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் : இந்த பாடல்களை மறக்க முடியுமா?

இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் : இந்த பாடல்களை மறக்க முடியுமா?

இசையமைப்பாளர், பாடகர் அனிருத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள அவரின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் 2 வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, அதில் அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. படத்தின் வெற்றிக்கு அவரின் இசையும் ஒரு காரணம் என்று விமர்சனங்கள் வந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் அனிருத்துக்கு திருமணம் நடக்கிறது. இதனால் மும்மடங்கு மகிழ்ச்சியில் இந்த பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படும் பிரபல இயக்குனர் கே.சுப்ரமணியம் குடும்பத்தை சேர்ந்தவர் அனிருத். இவரின் அம்மா லட்சுமி, பத்மா சுப்ரமணியம் அண்ணன் மகள். அவர் தந்தை ரவிசந்தர், நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவின் சகோதரர். இப்படி சினிமா பின்னணியில் வந்திருந்தாலும் 3 படத்தில் தனுஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனாலும் அனிருத் வெற்றிக்கு குடும்ப பின்புலம் மட்டுமே காரணமல்ல, அவரின் தனித்திறமை, இசை மீதான ஆர்வம், கடும் உழைப்பு, இளைஞர்களின் பல்ஸ் அறிந்து ட்யூன் அமைப்பது, பின்னணி இசைக்கு தனி கவனம் செலுத்துவது என பல காரணங்கள் என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

* ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் அனிருத். அந்த படத்தில் இடம் பெற்ற, ‛‛ஒய் தி கொலை வெறிடி...'' பாடலின் வெற்றி, அனிருத்தை ஒரே படத்தில் உயரத்துக்கு கொண்டு சென்றது. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அதிகம் யுடியூப்பில் கேட்கப்பட்ட பாடலாக இன்றும் ‛ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் டாப்பில் இருக்கிறது.

* தனுஷ் பாடி, அனிருத் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி டி பாடல் யுடியூபில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. யுடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த முதல் இந்தியப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து விஜய் நடித்த கத்தி, அஜித் வேதாளம், சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் என உயரத்துக்கு சென்றார் அனிருத். தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டா, நானி படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு இசையமைத்தார். இதுவரை மொத்தம் 30க்கும் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

அனிருத் இசையில் வைரலான சில தமிழ் பாடல்கள்

1) ஒய் திஸ் கொல வெறிடி

பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான பாடல். மறைந்த தொழிலதிபர் டாடா கூட இந்த பாடலை பாராட்டினார். தங்கலீஷில் எழுதப்பட்ட இந்த பாடல் அனிருத்தை அடையாளம் காண்பித்தது.

2) அரபிக்குத்து

தமிழக முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன். ஜொனிட்டா காந்தியுடன் இணைந்து பாடியும் அசத்தியிருந்தார் அனிருத். சிறு குழந்தைகளையும் ஆட வைத்த பாடல்.

3) வாத்தி கம்மிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பாடல். கானா பாலசந்தர் உடன் இணைந்து அனிருத்தே இந்த பாடலை பாடியிருந்தார்.

4) ஆலுமா டோலுமா

அஜித் நடித்த வேதாளம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல். அவர் ரசிகர்களை ஆட வைத்தது. சென்னை ஸ்லாங் கலந்து ஜி.ரோகேஷ் எழுதிய இந்த பாடலை அனிருத்தும் இணைந்து பாடியிருந்தார்.

5) மனசிலாயோ

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் இடம் பெற்ற குத்தாட்ட பாடல். இதில் மலேசியா வாசுதேவன் ஏ.ஐ குரலை பயன்படுத்தினார் அனிருத். ரஜினியின் எனர்ஜி, ஆட்டம் பாடலை இன்னும் ஹிட்டாக்கியது

6) நான் பிழை

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்காக, அந்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியிருந்தார். ரவி, சாஷா பாடியிருந்தனர். நான் பிழை நீ மழலை... எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை... நீ இலை நான் பருவ மழை... சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை... என்ற வரிகள் பலரை முணுமுணுக்க வைத்தது.

7) செல்லம்மா

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை வகார்த்திகேயனே எழுத, ஜொனிட்டா காந்தியுடன் இணைந்து பாடியிருந்தார் அனிருத். பலரின் மனதை தொட்ட பாடல்

8) காவாலா

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை தமன்னா டான்ஸை யார் தான் மறக்க முடியும். ஷில்பா ராவ், அனிருத் ரவிச்சந்தர் இணைந்து பாடியிருந்தனர். தெலுங்கு கலந்த வரிகள் இடம் பெற்ற இந்த பாலை எழுதியவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதினார்.

9) செல்பி புள்ள

விஜய் நடித்த கத்தி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியிருந்தார். சுனிதா சாரதியுடன் இணைந்து அனிருத்தே பாடியிருந்தார். இன்றைக்கும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் பாடல்.

10) அம்மா அம்மா

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் எஸ்.ஜானகி பாடிய உருக்கமான பாடல். இப்படியும் எனக்கு ட்யூன் போட தெரியும், அந்த பாடலை ஹிட்டாக்க தெரியும் என அனிருத் நிரூபித்த பாடல். இந்தகாலத்து அம்மா சென்ட்டிமென்ட் பாடலில் இந்த பாடலுக்கு முதலிடம் தான்.

11) தாய்கிழவி

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் எழுதி, பாடிய பாடல். அனிருத், தனுஷ் கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல்

12) டார்லிங் டம்பக்கு

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா இப்படிதான் பாடல் தொடங்கும், யுகபாரதி எழுதியிருந்தார். என்னடா வரிகள் இது என முதலில் பலரும் யோசித்தார்கள். ஆனால் பாடல் வெளியான சில மாதங்களில் பெரிய ஹிட்டானது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா டான்சும் ஹிட்.

13) கண்ணான கண்ணே நீ கலங்காதடி

நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற அழகான மெலோடி பாடல். விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடல் காதலர்களை கட்டிப்போட்டது

14) தங்கப்பூவே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல் விவேக் எழுத, ரவி.ஜி பாடியிருந்தார்

15) இளமை திரும்புதே

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‛பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சிம்ரனுக்கு அமைந்த நச் பாடல். உண்மையிலே பாடலை கேட்டவர்கள் ரஜினியை இந்த வரிகளில் பாராட்டினார்கள்.

இந்த பாடல்கள் தவிர காதல் கண்கட்டடுதே... (காக்கிசட்டை ), என்ன சொல்ல... (தங்கமகன்), வெளிச்சம் பூவே... (எதிர்நீச்சல்), நான் ரெடி... (லியோ), பத்தல பத்தல... (விக்ரம்), கண்ணழகா... (3), ஓ பெண்ணே... (வணக்கம் சென்னை), வெளிச்சபூவே... (எதிர்நீச்சல்), மரண மாஸ்... (பேட்ட), மேகம் கருக்காதோ... (திருச்சிற்றம்பலம்), மாரி... (மாரி), பாடல்களும் ரசிகர்களுக்கு இடையே வெகு பிரபலம்.
மேலே சொன்ன பாடல்கள் தவிர்த்து உங்களுக்கு பிடித்த அனிருத்தின் பாடல்களை கீழே கமென்ட்டில் சொல்லுங்க, அப்படியே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் பதிவு செய்யுங்க....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !