ஜெயிலர் 2 : வரவேற்பைப் பெறும் மூர்த்தி அண்ணன்
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான 'ஜெயிலர் 2' ரசிகர்களின் வரவேற்புடன் முதல் நாளிலேயே வெற்றிகரமான படம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது.
இப்படத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், ரஜினிக்கு அடுத்து பேசப்படக் கூடிய கதாபாத்திரமாக 'மூர்த்தி அண்ணன்' கதாபாத்திரம் அமைந்துள்ளது. அக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள நமோ நாராயணாவை ரசிகர்கள் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'நாடோடிகள்' படத்தில் எதற்கெடுத்தாலும் 'பிளக்ஸ் பேனர்' வைக்கும் சின்னமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் சுமார் 75 படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என நடித்துள்ளார்.
ஆனாலும், 'ஜெயிலர் 2' படத்தில் மூர்த்தி அண்ணன் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பும், பேச்சும் படத்திற்கும் பக்கபலமாக அமைந்துள்ளது. ஒரு கோமாளித்தனமான உள்ளூர் அரசியல்வாதி கதாபாத்திரம் அவருக்கான 'டெயிலர் மேட்' கதாபாத்திரமாகவே அமைந்துவிட்டது.
பட வெளியீட்டிற்கு முன்பு ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அவரைப் பற்றிப் பேசியது உண்மைதான் என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது.