இசையமைப்பாளர் தேவா மறைவு : ‛தேனிசை தென்றல்' ஓய்ந்ததாக திரையுலகினர் இரங்கல்
இசையமைப்பாளர் தேவாவிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் இடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல்
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
சிம்பு
'தேனிசைத் தென்றல்' தேவாவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. எங்கள் வாழ்வின் பல தருணங்களில் உங்கள் இசை கலந்திருந்தது. நீங்கள் வழங்கிய மெல்லிசைகளும், உற்சாகமும், நினைவுகளும் என்றும் எங்களுடன் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆன்மா அமைதியடையட்டும்.
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகின் இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவா சார் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இசையும், பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும். ஆழ்ந்த இரங்கல்.
குஷ்பு
இசையமைப்பாளர் தேவா மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பத்து நாட்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாக, சிரித்த முகத்துடன் நம்முடன் இருந்தவர் இன்று இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட தேவா, தேனைப் போன்ற இனிமையும், தென்றலைப் போன்ற இயல்பான குணமும் கொண்டவர். இசை மற்றும் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவ்வளவு விரைவில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தது பேரிழப்பு. தேவா அவர்களை என்றும் நினைவுகூர்வோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ஒய்ஜி மகேந்திரன்
எப்படி உங்கள் இழப்பை ஈடுகெட்ட முடியும் தேவா. இப்படி ஒரு அற்புதமான மனிதரை நாம் எப்படி மறக்க முடியும். உங்கள் இசை சாதாரண மனிதனின் ஆத்மாவில் நுழைந்தது. உங்கள் கானா ஸ்டைல் சாமானியனின் மகிழ்ச்சி. உங்களைச் சுற்றி இசைத் துறையில் ஜாம்பவான்கள் இருந்தபோதும் நீங்கள் ஆட்சி செய்தீர்கள். உங்கள் பணிவில் நீங்கள் இன்னொரு எம்.எஸ்.வி. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சாருகேசி மூலம் கிளாசிக்கல் பாணியில் அழியாத இசையைக் கொடுத்தீர்கள். உண்மையில் திரையில் என்னை நீங்கள் சாருகேசி ஆக்கினீர்கள். திரையுலகம் ஒரு சிறந்த இசையமைப்பாளரையும், அதைவிடச் சிறந்த மனிதரையும் இழந்துவிட்டது... டிசம்பர் 13 அன்று திரு கே.பாலசந்தர் பெயரில் சிறப்பு விருதுடன் உங்களை கவுரவிக்க பாரத் கலாச்சார் திட்டமிட்டிருந்தது. கொடூரமான விதி அந்த கவுரவத்தை எங்களுக்குத் தரவில்லை. நீங்கள் விட்டுச் சென்றவர்களின் இதயங்களில் என்றென்றும் நீங்கள் வாழ்வீர்கள்.
டி ராஜேந்தர்
தமிழ் திரையுலகத்தில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து, தன் தித்திக்கும் இசையால் திரை உலகத்தையே கட்டி ஆண்ட அந்த தேனிசை தென்றல் தேவா மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது. அந்த தேனிசை தென்றல் ஓய்ந்தது ஏன். அந்த திரையுலகத்தின் இசை தூண் சாய்ந்தது ஏன். தெரியவில்லை, நெஞ்சம் தாங்கவில்லை. எந்த இயக்குனர் என்றாலும் அவர்களிடத்திலே எளிமையாக பழகக்கூடிய ஒரு இசையமைப்பாளராய், தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் இசையமைப்பாளராய், வாழ்ந்து காட்டியவர் தான் தேவா. என் மகன் சிலம்பரசன் நடித்த 'தம்' திரைப்படத்தில் 'கலக்குவேன் கலக்குவேன்... கட்டம் கட்டி கலக்குவேன்'... என்று அத்தனை பாடல்கள் மூலம் கலக்கியவர், இன்றைக்கு கலங்க வைத்துவிட்டு சென்றுவிட்டாரே என்பதை நினைக்கும் போது நெஞ்சம் தாங்கவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்தினருக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாடகி மாலதி
என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி, எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கித் தந்தவர் தேவா. அவருடைய திருக்கரங்களால் கலைமாமணி விருது பெற்றது என் வாழ்வின் மறக்க முடியாத பெருமையான தருணம். அவருடைய மறைவுச் செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவருடன் இணைந்து பயணித்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது. அவர் எனக்கு அளித்த வாய்ப்புகளும், அந்தப் பயணத்தின் நினைவுகளும் என்றும் என் நெஞ்சில் நீங்காமல் நிலைத்திருக்கும். என்ன சொல்வதென்றே தெரியவில்லை… மனம் உடைந்து போனது போன்ற உணர்வு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பு இது. தேவா ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
சிபிராஜ்
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் சிறந்து விளங்கிய அவரது இசையால் 90-கள், 2000-களில் பல படங்கள் வெற்றிப் படங்களாகின. எளிமையும் பணிவும் கொண்ட தேவா, முன்னணி நடிகர்களின் மாஸ் காட்சிகளுக்கு தனது இசையால் வலுசேர்த்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ராமராஜன்
தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும், பெருந்துயரமாகவும், இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது. நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர். அவரின் இசை பிடிப்புனாலும், அதில் ஆழ்ந்து கற்பிப்புனாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து, ஒரு நல்ல இசையமைப்பாளராகவும், நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும், இன்றளவும் வலம் வந்த மிகச்சிறந்த திறமைசாலி தேவா. இயல் இசை நாடக மன்ற தலைவராகவும், கழக கொள்கை பாடல்களை உருவாக்கியும் வந்த, அம்மா மீது மாறா பற்றுக்கொண்டவர். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கேஎஸ் ரவிக்குமார்
நாங்கள் அனைவரும் படித்தது ஒரே பள்ளி. மறக்க முடியாத நினைவுகள் நிறைய இருக்கிறது. அவருக்கு கோவம் வந்து பார்த்ததில்லை. அந்தளவிற்கு சாந்தமான ஆள். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் டியூனை சொன்னார் அதற்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் உடனடியாக ஓகே சொன்னார் அந்த பாடல் தான் காதலா காதலா. எவ்வளவோ படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஆனால் அவருடைய கை மிகவும் மென்மையாக இருக்கும். நான் அவரை சந்திக்க வரும் போதெல்லாம் அவருடைய விரலையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நடிகர் சார்லி
தேவாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த சினிமாவுக்கு பேரிழப்பாகும். சாதாரண மக்களிடமும், பெரிய மனிதரிடமும் ஒரே மாதிரி பாசத்தோடு பழகக் கூடியவர். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் சிறப்போடு பணியாற்ற கூடியவர். எப்போதும் என் மீது மிகவும் பிரியமாக இருக்கக் கூடியவர். சினிமா துறையில் எத்தனை மாற்றங்கள் இருந்தாலும் எத்தனை தலைமுறையினர் மாறினாலும் எத்தனை சூழல்கள் மாறினாலும் தேவா இசை சினிமா இருக்கும் வரை அவருடைய இசை இருந்து கொண்டு தான் இருக்கும்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
35 வருடம் தேவா உடன் பயணித்துள்ளேன். அண்ணாமலை தொடங்கி, பாட்ஷா என பல படங்களை இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவரைப் போன்று காமெடிகள் சொல்ல முடியாது. அண்ணாமலை படம் எடுக்கும்போது முதலில் சந்தித்த பொழுது உங்களை சந்தித்தது ஆனந்தம் என்றார். அவரின் குடும்பத்தினரில் ஒருவனாக நான் இருந்திருக்கிறேன். அவர் மறைந்துவிட்டார் என்பது பெரிய அதிர்ச்சி. நான் எனது சகோதரரை இழந்து விட்டேன்.
நடிகர் சிவகுமார்
மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் சிவகுமார் அளித்த பேட்டி : தேவாவின் மறைவு அதிர்ச்சி தருகிறது. 1997ல் சூர்யாவின் நேருக்கு நேர் படத்திற்கு இசை அமைத்தார். ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை படம். கமலுக்கு பம்மல் கே சம்பந்தம் அவ்வை சண்முகி உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மருத்துவமனைக்கு சென்று மூக்கில் டீப் போட்டு தொல்லை இல்லாமல் ஒரு மறைவு அவருக்கு வந்துள்ளது. எந்த ஒரு தொல்லையும் தராமல் அமைதியாக அவர் கிளம்பிவிட்டார். அவரை பார்க்கும் போது தூக்குவது போல் தான் உள்ளது. ஹாட் அட்டாக் என்பது ஒரு மனிதனை தொல்லை இல்லாமல் மறைவிற்கு அழைத்து செல்லும். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.
நடிகர் கார்த்தி
இசையமைப்பாளர் தேவாவின் அளவற்ற உற்சாகமும், குழந்தை போன்ற வெள்ளந்தியான குணமும் அவரது இசையைப் போலவே தனித்துவமானவை. அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் மகிழ்ச்சியைப் பரப்பியவர். அவரது இனிமையான மெட்டுகளும், துள்ளலான சென்னை கானா பாடல்களும் என்றும் நம் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கும். தேவாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ்
தேவா சாரின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களை பேசினார். அவருடன் பணியாற்றி இருக்கிறேன். சிறந்த இசையமைப்பாளர். அவரது கானாவை ரசிப்பாங்க. ஆனால் அவர் நல்ல மெலோடி பாடலும் ரசிக்க வைத்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு நிச்சயம் பேரிழப்பு.
இசையமைப்பாளர் தினா
இன்னைக்கு சோகமான நாள். என் பாசத்திற்குரிய அண்ணன் தேவா மறைந்துவிட்டார். அவரிடம் 50 படங்களுக்கு உதவியாளராக பணியாற்றி உள்ளேன். முக்கியமாக பாட்ஷா படத்தில் பணியாற்றி இருக்கிறேன். எந்தவித பாகுபாடும் பார்க்காத சிறந்த மனிதர். தயாரிப்பாளரும், இயக்குனரும் அவரிடம் வந்துபோனால் மகிழ்ச்சியாக செல்வார்கள். பாசம் என்றால் இவரை மிஞ்ச முடியாது. இவரை விட எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய சிறந்த மனிதர். இது காலத்தின் கொடுமை என்று தான் சொல்வேன்.
இசையமைப்பாளர் சிற்பி
தேவா சார் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. எங்களது குடும்பத்தில் ஒருவர் இழந்ததை போன்ற உணர்வே உள்ளது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இசையமைப்பாளர் என்ற கர்வம் இல்லாத ஒரு மனிதரை இழந்து வாடுகிறோம். இசைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இது பேரிழப்பு.
நடிகர் பிரசாந்த்
எனது முதல் படத்திற்கு தேவா சார் தான் இசையமைத்தார். எனது பல படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்தவர். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆண்டவன் மன உறுதியை தர வேண்டும். எளிமையான, ஜாலியான மனிதர், எளிதாக எல்லோருடன் பழகக்கூடியவர். கானா பாடலை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தேவா தான். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கும், இசைத்துறைக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.