ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஆகாஷ் பிரேம்குமார் : தனி ஹீரோயினாக ஸ்ரீதேவி அப்பல்லா
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா. 'ஹைக்கூ' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ஏகன் ஜோடியாக நடிக்கிறார். படத்தின் இன்னொரு நாயகியாக பெமினா ஜார்ஜ் நடிக்கிறார். படம் வருகிற 23ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் 'யுவர்ஸ் லவ்விங்லி' என்ற படத்தின் மூலம் தனி ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஸ்ரீதேவி அப்பல்லா. எம்.ஆர்.மோசன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முத்துராம் முருகன் இயக்குகிறார். இப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் புகழ் நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நாயகன். ராம்ஜி, பக்ஸ், மைதிலி, சந்திரன், நசாத், துஷார், ஆஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
படம் குறித்து இயக்குநர் முத்துராம் முருகன் கூறும்போது “செல்போன்கள் பயன்பாடு இல்லாத காலகட்டத்தில், வாக்மேன் உள்ளிட்ட இசைச் சாதனங்கள் வழியாகவும், நேரடி சந்திப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் காதலர்கள் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட விதத்தை இப்படம் பேசுகிறது.
பள்ளிப் பருவத்தின் நட்பு, முதல் காதல், அன்றைய மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என 2000-களின் தொடக்ககால வாழ்க்கையை இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீண்டும் திரும்பி பார்க்கும் விதமாகவும், அசை போடுவதாகவும், இன்றைய தலைமுறையினருக்கு அன்றைய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும்” என்கிறார்.