கடைசி வரை நிறைவேறாமலேயே போன நானா படேகரின் மலையாள பட ஆசை
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தனது 75வது வயதில் இன்று (அக்.,8) காலமானார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட மூன்று முறை தேசிய விருது பெற்ற அவர், தமிழில் 'பொம்மலாட்டம்', 'காலா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, மராத்தி ஏன் கன்னடத்தில் கூட ஒரு படத்தில் நடித்துள்ள நானா படேகர், கடந்த 50 வருட திரையுலகப் பயணத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இதில் மலையாளத்தில் தான் நடிக்காதது குறித்த தனது வருத்தத்தை, கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார் நானா படேகர்.
இது பற்றி அவர் அப்போது பேசும்போது, நான் முதன்முதலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பிற்காக கேரளா வந்தேன். அன்று முதல் இன்று வரை இங்கிருக்கும் சமூக மற்றும் அரசியல் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மலையாளத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு இயக்குனர் கூட என்னை அணுகவில்லை. அப்படியென்றால் நான் ஒரு நடிகராக இன்னும் மேம்பட வேண்டும் என்று அர்த்தம். நான் எனது சிறப்பான நடிப்பைக் கொடுத்து முயற்சிப்பேன்; உங்களை நிச்சயமாக ஏமாற்ற மாட்டேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். ஆனாலும், மலையாளப் படத்தில் நடிக்காமலேயே அவர் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.