ஜேசன் சஞ்சய் ஹீரோவாகிறார் : விரைவில் வருகிறது அறிவிப்பு
ஒரு வழியாக திரைக்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டது சிக்மா படம். முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படமான இதற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. இதுவரை படம் எத்தனை கோடி வசூல் என படத்தை தயாரித்த லைகா நிறுவனமும் சொல்லவில்லை.
சிக்மா என்பது தமிழ் படம் என்றாலும், ஆந்திராவில், கேரளாவில் படத்தை நன்கு பிரமோசன் செய்தார் ஜேசன் சஞ்சய். தமிழகத்தில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே படம் பற்றி பேசினார். சிக்மா பிரஸ் ஷோ முடிந்தபின் சில நிமிடங்கள் மட்டுமே பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். சில கேள்விகள், சில பிரச்னைகளால் அவர் பேசவில்லை என்று கூறப்பட்டது. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனாலும், கதை, திரைக்கதை, நடிப்பு, பாடல்கள் என பல காரணங்களால் படம் ஓடவில்லை.
இந்நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ஜேசன் சஞ்சய். இந்தமுறை அவரே படத்தில் ஹீரோ என தகவல். அவரே இயக்குவரா? வேறு யாருமா என தெரியவில்லை. சிக்மா படத்தை தயாரித்த லைகா நிறுவனமே அந்த படத்தை தயாரிக்கிறது. விரைவில் முறைப்படி அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.
போட்டோ வைரல்
ஜேசன் இயக்கிய முதல்படமான சிக்மா-வை காண அவரது அம்மா சங்கீதா, தங்கை சாஷா ஆகியோர் கடந்தவாரம் சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் முதல்நாள் முதல்காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர். பல மாதங்களுக்கு பின் சங்கீதா வெளி உலகிற்கு வந்ததால் அவர் வைரலானார். இந்நிலையில் அம்மா சங்கீதா, தங்கை சாஷா மற்றும் சிக்மா பட வில்லன் ஷிவ் பண்டிட் ஆகியோர் உடன் ஜேசன் சஞ்சய் இருக்கும் போட்டோ ஒன்று தற்போது வலைதளங்களில் வைரலானது.