நிகிலா விமல் நடித்த வெப் சீரிஸை வெளியிட நீதிமன்றம் தடை
சமீப காலமாக கடந்த வருடங்களில் நடைபெற்ற பிரபல கொலை வழக்குகளை மையப்படுத்தி பல வெப் சீரிஸ்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதேசமயம், அப்படி மலையாளத்தில் உருவான 'அனலி' என்கிற வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகவிருந்த நிலையில், நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இதில் நிகிலா விமல், லியோ லிசாய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவையே உலுக்கிய கூடத்தாய் கொலை வழக்கை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோலி ஜோசப் என்கிற பெண், எர்ணாகுளம் மூன்றாவது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இந்த வெப் சீரிஸை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறும்போது, தற்போது வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் உள்ள ஒரு முக்கியப் பெண் கதாபாத்திரம் தன்னை ஒத்திருப்பதாகவும், தன்னை குற்றவாளியாகச் சித்தரிக்கும் வகையில் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், இந்த வெப் சீரிஸை வெளியிடும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இதற்கு தடை விதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஜோலி ஜோசப்பின் மனுவைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ஜோலி ஜோசப்பின் மனுவை அங்கீகரித்து இந்த வெப் சீரிஸ் வெளியீட்டுக்கு எதிரான தடையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.