50வது நாளில் 'மொத ராத்திரி'
அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான படம் 'மொதா ராத்திரி'. வளர்ந்து வரும் நடிகர்கள் நாயகனாகவும், நாயகியாகவும் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
ஓடிடி தளத்தில் 20 நாட்களுக்கு முன்பு வெளியான பின்பும் இன்னும் சில தியேட்டர்களில் சில காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்படம் நாளை 50வது நாளைத் தொடுகிறது. இதற்கான சிறிய விழா ஒன்று நாளை சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற உள்ளது.
இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்த பின்பும் பல ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடித்த ரிஷிகாந்த் நடித்து அடுத்து வெளிவந்த 'டோரதி' படம் வரவேற்பைப் பெற்றதால் அவர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் சில படங்கள் எதிர்பாராத வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளன. அதில், 'மொத ராத்திரி' படமும் உள்ளது.