டிரைலர்களின் 24 மணிநேர சாதனை : தொடர்ந்து முதலிடத்தில் 'பராசக்தி'
யூ டியுப் தளத்தில் வெளியாகும் டிரைலர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கிறது, மொத்தமாக எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது என்பது அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
இந்த 2026ம் வருடத்தைப் பொறுத்தவரையில் டிரைலர்களில் இரண்டு படங்கள் புதிய சாதனைகளைப் படைத்தது. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 34.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது.
ஆனால், அந்த சாதனை ஒரு நாள் மட்டுமே நீடித்தது. அதற்கடுத்த நாள் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' டிரைலர் 24 மணி நேரத்தில் 40 மில்லியன் பார்வைகளை ரியல் டைமில் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' டிரைலர் 24 மணி நேரத்தில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழில் மட்டும் 12.2 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. தெலுங்கு, ஹிந்தி மொழிகளையும் சேர்த்து 21 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழ் டிரைலர்களைப் பொறுத்தவரையில் விஜய்யின் 'ஜனநாயகன், தி கோட், லியோ, பீஸ்ட், வாரிசு, பிகில்' ஆகிய படங்கள் 24 மணி நேர சாதனையில் டாப் 10 பட்டியலில் உள்ளன.