50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராமராஜன்: இளையராஜா இசையில் அவருக்கு பிடித்த பாடல் எது?
இன்று (அக்.,8) நடிகர் ராமராஜன் பிறந்தநாள். சிவகங்கை மாவட்டம் ஓக்கூரை பூர்வீகமாக கொண்டவர் ராமராஜன். மதுரை அடுத்த சொக்கம்பட்டியில் வளர்ந்தார். ஆரம்பத்தில் மதுரையை அடுத்த பல்லவராயன்பட்டி டூரிங் டாக்கீசில் பணியாற்றினார். பின்னர்,
மேலுார் கணேஷ் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார். அவரின் இயற்பெயர் குமரேசன் ராமையா.
சென்னை வந்து ராம.நாராயணன் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றினார். 'மீனாட்சி குங்குமம்' படத்தில் சின்ன வேடத்திலும் நடித்தார். அதை தொடர்ந்து அவர் இயக்கிய 'சிவப்பு மல்லி'யிலும் சின்ன வேடத்தில் வருவார். 1985ல் 'மண்ணுக்கேத்த பொண்ணு' படத்தை இயக்கினார். 1986ல் 'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தில் ஹீரோ ஆனார். பல படங்களையும் இயக்கினார்.
திருச்செந்துார் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். பிற்காலத்தில் மதுரையில் சொந்தமாக தியேட்டர் வாங்கி தியேட்டர் அதிபரும் ஆனார். அந்த காலத்திலேயே தமிழில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஹீரோக்களில் ராமராஜனும் ஒருவர். ஹீரோயிசம் பார்க்காமல் டவுசர் போட்டு நடித்தார். பல படங்களில் வேட்டியில்தான் வருவார். நிஜ வாழ்க்கையில் கூட, அரசியல்வாதி ஆன பின்னரும் கூட மஞ்சள் போன்ற வண்ணங்களில் பளீச்சென சட்டை போட்டு பிரபலம் ஆனார். அவருக்கு மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு கடைசி நேரத்தில் தவறி போனதாகவும் தகவல். 'பம்பாய்' படத்தில் மணிரத்னம் அழைத்தும் ஹீரோ அல்லாத ரோலில் நடிக்க மறுத்ததாக கேள்வி.
இப்போது 'கடவுள் தந்த பரிசு' என்ற தனது 46வது படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். அந்த படத்துக்கு இசையமைப்பவர் இளையராஜா. காசிமாயன் இயக்க, நகைச்சுவை பகுதிகளை ராஜகோபால் எழுதுகிறார்.
இதில் கோவை சரளா, செந்தில் ஆகியோரும் ராமராஜனுடன் இணைகிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது இளையராஜா, ராமராஜன் கூட்டணியில் வரும் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக 50வது ஆண்டை சினிமாவில் தொட உள்ளார் ராமராஜன். அவர் முதலில் நடித்த 'மீனாட்சி குங்குமம்' 1977ல் வெளியானது. இளையராஜாவும் சினிமாவில் 50வது ஆண்டை கொண்டாடுகிறார். அவர் முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' 1976ம் ஆண்டு ஆண்டு வெளிவந்தது. அடுத்து 47, 48, 49வது படத்தை முடித்துவிட்டு, தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க வேண்டும் என்பது ராமராஜனின் ஆசை.
ஆரம்பத்தில் தியேட்டரில் டிக்கெட் கொடுத்த ராமராஜன், பிற்காலத்தில் மதுரையில் நடனா காம்பளக்ஸ் தியேட்டரை விலைக்கு வாங்கி, அதில் 'கரகாட்டக்காரன்' படத்தை 400 நாட்கள் ஓட வைத்தார். 14 ஆண்டுகளுக்குபின் அந்த தியேட்டரை வேறு ஒருவருக்கு கொடுத்தார். இப்போது அந்த தியேட்டர் இல்லை.
ராமராஜன் நடிப்பில் பல படங்கள் வெற்றி அடைந்தன. குறிப்பாக, கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல்
* எங்கஊரு பாட்டுக்காரன்
* நம்ம ஊரு நல்ல ஊரு (1986)
* செண்பகமே செண்பகமே (1988)
* எங்க ஊரு காவல்காரன் (1988)
* என்னப் பெத்த ராசா (1989)
* பாட்டுக்கு நான் அடிமை (1990)
* ராசாவே உன்னெ நம்பி (1988) ஆகிய படங்களும் ஹிட்டாகின. கிராமத்து கதை, இளையராஜா பாடல்கள், எம்ஜிஆர் பாணியில் பெண்களை கவரும், மக்களுக்கு நல்லது செய்யும் குணம் ஆகியவை ராமராஜன் சினிமா பாணியாக இருந்தன. நடிகை நளினியை திருமணம் செய்தார் ராமராஜன். பின்னர் அவர்கள் பிரிந்தனர். ராமராஜன், நளினி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் வெளிநாட்டில் இருக்கிறார். மகள் சென்னையில் வசிக்கிறார்.
* மண்ணுக்கேத்த பொண்ணு (1985) - இயக்குனர்
* ஹலோ யார் பேசறது (1985) - இயக்குனர்
* அம்மன் கோவில் வாசலிலே (1996) - இயக்குனர்
* கோபுர தீபம் (1997) - இயக்குனர்
* சீறி வரும் காளை (2001) - இயக்குனர்
* மருதாணி, விவசாயிமகன், நம்ம
ஊருராசா, ஒன்று எங்கள் ஜாதியே, சோலை புஷ்பங்கள், மறக்கமாட்டேன் உள்ளிட்ட படங்களை ராமராஜன் இயக்கி உள்ளார். ரீ என்ட்ரி ஆகி 'மேதை, சாமானியன்' படங்களில் நடித்தார். அவர் திரையுலக வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டபோதிலும் அவர் ஹீரோவாக நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார். மற்ற குணசித்திர வேடங்கள், மற்ற வேடங்களில் நடிக்க மறுத்துவிடுவது அவர் பாலிசி. ராமராஜன் நடிப்பில், பூஜை போட்டு, சில காட்சிகள் எடுக்கப்பட்டு வெளி வராமல் 19 படங்கள் இருக்கின்றன.
ராமராஜன் படங்களின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள். இன்றைக்கும் பட்டி தொட்டி எங்கும் இந்த கூட்டணியில் உருவான கிராமத்து, மெலோடி பாடல்கள் ஒலித்து வருகின்றன. ராமராஜனுக்காக சொந்த குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் இளையராஜா.
இவர்கள் கூட்டணியில் 'மாங்குயிலே பூங்குயிலே, இந்த மான் உந்தன் சொந்த மான், குடகு மலைக் காற்றில் வரும், மாரியம்மா மாரியம்மா, செண்பகமே செண்பகமே, மதுர மரிக்கொழுந்து வாசம், சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா, தானா வந்த சந்தனமே, ஈரமான ரோஜாவே, நேத்து ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம், ராசாத்தி மனசுல ராசாத்தி, ஊரெல்லாம் உன் பாட்டுத்தான், பொன்மானே பொன்மானே, வெள்ளிக் கொலுசு மணி' போன்ற பல பாடல்கள் ஹிட்டாகின. தனது பாடல்கள் தவிர, இளையராஜா இசையில் ராமராஜனுக்கு பிடித்த பாடல் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என அவர் கூறியிருக்கிறார்.