இசை கலைஞர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் : இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்ட முடிவு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பாளர் மற்றும் இசை கலைஞர்கள் சங்கம் புதிய கட்டிடம் கட்ட தீர்மானித்துள்ளது.
சென்னை வடபழனி கமலா தியேட்டர் அருகே இசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்தமாக இடம் உள்ளது. இதில் ஒரு விழா அரங்கமும், நிர்வாக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதனை இடித்து விட்டு பிரமாண்ட இசை வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். தியேட்டர், ரிக்கார்டிங் தியேட்டர், இசை பயிற்சி மையம், தங்கும் அறைகள் உள்பட பல வசதிகளுடன் இது உருவாக இருக்கிறது.
இந்த கட்டிட நிதிக்காக அனைத்து இசை அமைப்பாளர்களும் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழாக்களை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடத்த இருக்கிறார்கள். இதற்காக மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் துவங்குகிறது. முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.
இதன் அறிமுக நிகழ்வு நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் முன்னணி பாடகர் பாடகிகள் கலந்து கொண்டனர்.