உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படத்தின் போஸ்டரிலேயே கதையை மறைத்து வைத்த தமிழ் இயக்குநர்கள்

படத்தின் போஸ்டரிலேயே கதையை மறைத்து வைத்த தமிழ் இயக்குநர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் முதல்பார்வை (பர்ஸ்ட் லுக்) அல்லது போஸ்டர் வெளியாகும் போது, பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். ரசிகர்களும் அதை கொண்டாடுவார்கள். ஒரு போட்டோவிற்கு ஏன் இவ்வளவு விளம்பரம் என்று கூட பலர் நினைக்கலாம். ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய விஷயம் அல்ல. அதை உற்று கவனித்தால் பல டைரக்டர்கள் அந்த ஒரு போஸ்டரிலேயே படத்தின் மொத்த கதையையும் குறியீடுகள் மூலம் சொல்லி இருப்பார்.

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, படத்தின் மொத்தக் கதையையோ அல்லது மையக்கருவையோ ஒரே ஒரு போஸ்டரில் ஒளித்து வைத்த தமிழ் இயக்குநர்களின் சுவாரஸ்யமான போஸ்டர் ரகசியங்கள் இதோ...

1. மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த 'மாநாடு' திரைப்படத்தின் போஸ்டர்கள் அனைத்துமே டைம் லூப் (Time Loop) என்ற புதுமையான கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு மிகநுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

மறைந்துள்ள ரகசியம்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இஸ்லாமிய இளைஞராக தலையில் தொப்பியுடன், தொழுகை செய்து கொண்டிருப்பவராக சிலம்பரசன் காட்டப்பட்டிருப்பார். ஆனால் அவர் நெற்றியில் ரத்தம் வழிந்தபடி, நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது போல் இருக்கும். சாதாரணமாக பார்த்தால் இது துப்பாக்கி குண்டு போல் தெரியலாம். ஆனால் அது கடிகாரத்தின் குறியீடாக டைரக்டர் வைத்திருப்பார். அதே போல் சிலம்பரசனின் பேக்கிரவுண்டில் கலவரம் நடப்பது போலவும் காட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல படத்தின் டைட்டிலில், டு என்பதையே டைம்லூப் கான்செப்ட்டை மறைத்து வைத்திருப்பார் டைரக்டர்.

கதையின் கரு : கதாநாயகன் அப்துல் காலிக் ஒரு குறிப்பிட்ட அரசியல் மாநாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, மீண்டும் மீண்டும் ஒரே நாளில் சிக்கிக் கொள்ளும் 'டைம் லூப்' சக்கரத்தையும்; அந்த நேரத்தைச் சரிசெய்து, ஓடும் கடிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முதலமைச்சரைக் காப்பாற்றப் போராடும் கதையையும் அந்த சுழலும் கடிகார முட்களும், கையில் இருக்கும் கடிகாரமும் துல்லியமாக உணர்த்தின.

2. துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் போஸ்டர்கள் வெளியான போது, அது ஒரு சாதாரண ராணுவ வீரனின் கதையாகவே பார்க்கப்பட்டது.

மறைந்துள்ள ரகசியம் : அந்த போஸ்டர்களில் விஜய் ஒரு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நிற்பார். பின்னணியில் மும்பை மாநகரம் அதில் சில புள்ளிகள் 12 என்கிற கோட் வேர்டு இணைக்கப்பட்டிருக்கும்.

கதையின் கரு : படம் வெளியான பிறகே தெரிந்தது; மும்பையில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் நிகழவிருக்கும் தொடர் குண்டுவெடிப்புகளையும், அதை முறியடிக்க 12 ராணுவ வீரர்களைக் கொண்டு விஜய் நடத்தும் ரகசிய ஆபரேஷனையும் தான் அந்த '12' என்ற எண் உணர்த்தியது.

3. ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவனின் பிரம்மாண்ட படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் போஸ்டர், வெளியான காலத்தில் பெரும் புதிராக இருந்தது.

மறைந்துள்ள ரகசியம் : போஸ்டரில் கார்த்தியின் முகம் பாதி வெளிச்சத்திலும் பாதி அடர்ந்த நிழலிலும் இருக்கும். அவரது முகத்தின் பின்னணியில் சிதைந்த நிலைமையிலான பழமையான சோழர்களின் புலிச் சின்னமும், பாறை ஓவியங்கள் போன்ற கோடுகளும் இடம் பெற்றிருக்கும்.

கதையின் கரு : நவீன காலத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதன் (கார்த்தி), பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மணல் மேடுகளுக்குள் மறைந்துபோன சோழ வம்சத்தின் கடைசி இளவரசரையும் மக்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் பயணமே கதை என்பதை அந்தச் சிதைந்த புலிச் சின்னமும் பழங்காலக் குறியீடுகளும் முன்கூட்டியே உணர்த்தின.

4. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மறைந்துள்ள ரகசியம் : கருப்பு-வெள்ளையில் அமைக்கப்பட்ட அந்த போஸ்டரில் முகங்களிலும் ஆழமான வெட்டுக்காயங்களும் தழும்புகளும் இருக்கும். கீழே Code Red என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.

கதையின் கரு: இந்த மூன்று கதாபாத்திரங்களும் சட்டத்தின் வெவ்வேறு பக்கங்களில் (முன்னாள் ஏஜென்ட், போதைப்பொருள் கடத்தல்காரர், ரகசிய காவல் அதிகாரி) இருந்தாலும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க நடக்கும் ஒரே வன்முறைச் சூழலில் எவ்வாறு பிணைக்கப்படுகிறார்கள் என்பதை அந்தப் போஸ்டர் உணர்த்தியது. 'Ghost' என்ற வாசகம் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 'விக்ரம்' மீண்டும் உயிர்த்தெழுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டது.

5. சார்பட்டா பரம்பரை

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு சாதாரணக் குத்துச்சண்டைப் படத்தின் போஸ்டர் போலத் தோன்றினாலும், அதற்குள் பல வரலாற்றுப் பதிவுகள் இருந்தன.

மறைந்துள்ள ரகசியம்: ஆர்யா குத்துச்சண்டை வளையத்திற்குள் கம்பீரமாக நிற்பார். பின்னணியில் 1970-களின் சென்னை, அன்றைய அரசியல் தலைவர்களின் படம் ஸ்டென்சில் ஆர்ட், பழைய ரகக் கைக்கடிகாரங்கள் மற்றும் அக்காலகட்டத்தின் உடைகள் மிகத் துல்லியமாக இடம் பெற்றிருக்கும்.

கதையின் கரு: இது வெறும் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கும் குத்துச்சண்டை அல்ல; 1970-களில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலம் (Emergency) மற்றும் வடசென்னையின் அன்றைய சமூக-அரசியல் பின்னணியில் 'சார்பட்டா' மற்றும் 'இடியப்ப' பரம்பரைக்கு இடையே நடக்கும் கௌரவப் போராட்டம் என்பதை அந்த விவரங்கள் உணர்த்தின.

6. மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவான 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமான மங்கலான (Blur) வடிவமைப்புடன் வெளியானது.

மறைந்துள்ள ரகசியம்:
போஸ்டரில் விஜய் தனது கையில் இருக்கும் உலோகக் காப்பைச் சுழற்றிக் கொண்டிருப்பார். அவரது முகம் தெளிவாகத் தெரியாமல் மங்கலாக இருக்கும்.

கதையின் கரு: நாயகன் 'ஜே.டி' ஒரு மதுப்பழக்கம் உள்ள, வாழ்க்கையைப் பற்றிய தெளிவில்லாத போதைக்கு அடிமையான பேராசிரியர் என்பதை அந்த மங்கலான தோற்றமும்; சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்ற பிறகு அவர் சந்திக்கும் சவால்களையும் அதிரடிகளையும் அவரது கையில் இருக்கும் காப்பும் உணர்த்தின.

7. வட சென்னை


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை' படத்தின் போஸ்டர் மிகவும் ஆழமான ஒரு குறியீட்டைக் கொண்டிருந்தது.

மறைந்துள்ள ரகசியம்:
தனுஷ் ஒரு போலீஸ் வேனில் இருந்து இறங்குவது போலவும், அவரது கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருப்பது போலவும் இருக்கும். ஆனால், அந்த கைவிலங்கின் சங்கிலி ஒரு மீன்பிடிப் படகின் தடிமனான கயிற்றோடு பிணைக்கப்பட்டிருக்கும்.

கதையின் கரு: 'அன்பு' (தனுஷ்) என்ற சாதாரண கேரம் விளையாட்டு வீரன், வட சென்னையின் கடலோர மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தினாலும், அங்குள்ள துரோகங்களினாலும் எவ்வாறு குற்ற உலகத்திற்குள் இழுக்கப்பட்டு பந்தயப் பொருளாய் மாறுகிறான் என்பதை அந்தப் படகுக் கயிறும் கைவிலங்கும் தத்ரூபமாக உணர்த்தின.

8. இராவணன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'இராவணன்' படத்தின் போஸ்டர் ஒரு தத்துவார்த்தக் குறியீடாகும்.

மறைந்துள்ள ரகசியம் : போஸ்டரில் விக்ரமின் முகம் கோபமாக இருக்கும். ஆனால், கீழே நீரில் தெரியும் அவரது பிம்பத்தில் சாந்தமான அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒரு முகம் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கதையின் கரு : சமூகத்தால் 'அசுரன்' அல்லது 'வில்லன்' என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனுக்குள் இருக்கும் நல்லவனையும், சமூகத்தால் 'ராமன்' அல்லது 'நல்லவன்' என்று கருதப்படுபவனுக்குள் இருக்கும் கொடூரத்தையும் கேள்வி கேட்கும் கதையே 'இராவணன்' என்பதை அந்த நீர் பிம்பக் குறியீடு உணர்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !