உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'புறநானூறு' என்ற இலக்கியம் தந்த கரு. உருவானது “காதல் கோட்டை”

பிளாஷ்பேக்: 'புறநானூறு' என்ற இலக்கியம் தந்த கரு. உருவானது “காதல் கோட்டை”


திரைப்படத் துறையில் இலக்கியத்தின் தாக்கம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவும், பல தரமான கலைப் படைப்புகளின் உருவாக்கத்திற்குத் தரவுகளை அள்ளி வழங்கும் ஓர் அழகிய பொக்கிஷமாகவும் காலம் காலமாக இருந்து வருகின்றது என்பதை திரைமொழியை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.

மலையாளம் மற்றும் வங்க மொழி திரைப்படங்களோடு ஒப்பிடுகையில், தமிழில் இதன் தாக்கம் சற்று குறைவு என எண்ணினாலும், நிறைவான பல சரித்திர, இதிகாச, புராண கதைகளும், புகழ் பெற்ற பல நாவல்களும் தமிழில் திரைவடிவம் பெற்று, ரசிகர்களின் ரசிப்புத் தன்மையை மேம்படுத்தியிருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க இயலாது. “மணிமேகலை”, “அம்பிகாபதி”, “கண்ணகி” என பண்டைய இலக்கியங்களைத் தழுவியும், “கந்தன் கருணை”, “அகத்தியர்”, “காரைக்கால் அம்மையார்” என பக்தி இலக்கியத்தின் அடிப்படையிலும், “பார்த்திபன் கனவு”, “பொன்னியின் செல்வன்”, “மோகமுள்”, “கற்றது தமிழ்”, “அசுரன்” என வரலாற்றுத் கதைகள் மற்றும் நவீன புதினங்கள் ஆகியவற்றைத் தழுவியும் ஏராளமான திரைப்படங்கள் இன்னும் வந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த வரிசையில், வசூல் ரீதியாக எடுக்கப்பட்ட சில சமூகத் திரைப்படங்களுக்கும் ஓர் உந்து சக்தியாக, ஒரு குறியீடாக நம் தமிழ் இலக்கியம் பயன்பட்டிருக்கின்றது என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு குறியீடாக, புறநானூற்றுப் பாடலின் தாக்கத்தில், வசூல் ரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு சமூகத் திரைப்படம்தான் “காதல் கோட்டை”.

“புறநானூறு” என்ற தமிழ் இலக்கியத்தில், மன்னன் கோப்பெரும் சோழனுக்கும், புலவர் பிசிராந்தையருக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தையும், பெருமையையும் எடுத்தியம்பும் செய்யுளின் தாக்கத்தில் உருவானதுதான் இந்தக் “காதல் கோட்டை” திரைப்படத்திற்கான ஒன் லைன். உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சோழநாட்டை ஆண்டு வந்த மன்னன் கோப்பெருஞ்சோழன். குமரிமுனை வரை பரவியிருந்த பாண்டிய நாட்டின் தென்கோடியில் பிசிர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர்தான் புலவர் ஆந்தையார். பிசிராந்தையாரைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் கோப்பெருஞ்சோழன், அவரை நேரில் சந்தித்து, அவருடன் நட்புப் பாராட்ட மனம் விரும்பியிருந்தும், காலம் அதற்கு இடம் தராமல் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே நட்பு கொள்ளும் நிலை ஏற்பட்டு, தங்களது நட்பினை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்” எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க இருந்தது இவர்களது நட்பு. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையரும் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டிருந்த இந்த புறநானூற்று இலக்கியப் பாடல்தான் இயக்குனர் அகத்தியனின் “காதல் கோட்டை” திரைப்படத்திற்கான மூலமாக அமைந்திருந்தது. ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு பாராட்டி வந்த மன்னன் கோப்பெருஞ்சோழன், புலவர் பிசிராந்தையர் ஆகிய இவ்விருவரின் நட்பையே, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமலேயே தங்களது காதலைப் பரிமாறிக் கொண்டு, இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடிவதாக கதையை நகர்த்தி, இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகின்றனர் என்பதாக படத்தை எடுத்து வெற்றி கண்டிருப்பார் இயக்குனர் அகத்தியன்.

அஜித்குமார், தேவயானி, ஹீரா, கரண், 'தலைவாசல்' விஜய், ராஜீவ், ராஜா, பாண்டு ஆகியோரின் நடிப்பில், தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்து, சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் 1996ம் ஆண்டு வெளிவந்த இந்தக் “காதல் கோட்டை” திரைப்படம், அன்றைய ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான கலைப்படைப்பாக அமைந்திருந்ததோடு, தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், ஒரு மாபெரும் வெற்றியையும் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !