'வருஷம் 16' ராதிகா முதல் 'சின்னத்தம்பி' நந்தினி வரை: குஷ்பு நடித்த 'டாப் 10' படங்கள்
நடிகை குஷ்புக்கு இன்று (செப்.,29) பிறந்தநாள். குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தை தொடங்கியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படங்களில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அரசியலுக்கு சென்றார். இப்போதுகூட ஜெயா டிவி ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவ்னி மூவீஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.
திரைத்துறையில் 1980ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 46 ஆண்டுகளை கடந்து சினிமாவில் இருக்கிறார். 1980ல் 'தி பர்னிங் ட்ரெயின்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தென்னிந்தியாவில் அவர் நடித்த முதல் படம் கலியுக பண்டவுலு. இந்த தெலுங்கு படம் 1986ல் வெளியானது. வெங்கடேஷ் ஜோடியாக நடித்தபோது அவர் வயது 15. அந்த வகையில் இங்கே 46 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழில் தர்மத்தின் தலைவன்,(1988) வருஷம் 16 (1989) படங்கள் மூலமாக என்ட்ரி ஆனார். ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். சமீபத்தில் வெளியான 'டபுள் ஆக்குபன்சி' படத்தில் கூட டாக்டராக வந்தார். தமிழில் குஷ்பு நடித்த சில பிரபல படங்கள் இதோ...
1) வருஷம் 16 / ராதிகா
டில்லியில் இருந்து தனது தாத்தா வீட்டு திருவிழாவுக்கு வருகிற ராதிகா என்ற துறுதுறு இளம்பெண் கேரக்டரில் குஷ்பு நடித்து இருப்பார். அவருக்கும் ஹீரோ கார்த்திக் இடையேயான மோதல், காதல் காட்சிகள் ஹிட்டாகின. கிளைமாக்சிலும் குஷ்பு நடிப்பு உருக்கம். குறிப்பாக இளையராஜா இசையில் 'பூப்பூக்கும் மாசம், கங்கை கரை மன்னடி, ஹேய் அய்யாசாமி' பாடல்கள் குஷ்புவை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு போய் சேர்த்தன. யாருடா இந்த குஷ்பு என தமிழக மக்கள் பேச ஆரம்பித்தனர். தமிழில் பிற்காலத்தில் குஷ்பு முன்னணி ஹீரோயின் ஆக விதை போட்டது பாசில் இயக்கிய இந்த படம். முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தவர் நிரோஷா. அவர் கால்ஷீட் பிரச்னையால் விலக, குஷ்பு நடித்தார்.
2) சின்னத்தம்பி / நந்தினி
பணக்கார குடும்பத்து பெண், பாசக்கார, முரட்டு அண்ணன்களின் தங்கை நந்தினியாக நடித்தார் குஷ்பு. பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா நடித்த இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட்டானது. 1991ல் வெளியான இந்த பட வெற்றிக்கு அம்மா சென்டிமென்ட், குஷ்பு, பிரபு கேரக்டர், இளையராஜா இசை, கவுண்டமணி காமெடியும் முக்கியமான காரணமாக இருந்தன. 'போலோமா ஊர்கோலம், அரைச்ச சந்தனம்' பாடல்களில் குஷ்பு அழகை யார்தான் மறக்க முடியும்.
3) அண்ணாமலை / சுப்புலட்சுமி
'கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே தாழம்பூ' என ரசிகர்களை பார்த்து ரஜினி கேள்வி கேட்பார். தியேட்டரே குஷ்பு... குஷ்பு என சொல்லும். அப்படி குஷ்புவுக்கு ரசிகர்களை கொடுத்த படம். மிக எளிமையான கிராமத்து பெண், குடும்ப தலைவி என நடிப்பிலும் குஷ்பு கலக்கியிருப்பார். குஷ்பு, ரஜினி சம்பந்தப்பட்ட அந்த பாம்பு காமெடி, கடவுளே கடவுளே டயலாக் தமிழகத்தில் பிரபலமானது. பாலசந்தர் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வந்த இந்த படம் குஷ்புவின் கமர்ஷியல் படங்களில் முக்கியமானது.
4) நாட்டாமை / லட்சுமி
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சரத்குமார் ஜோடியாக குஷ்பு நடித்த படம். ஹோம்லியாகவும் வருவார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் ஆடியிருப்பார். குறிப்பாக, அந்த கொட்டை பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாடல் சூப்பர் ஹிட்டானது. வயதான கெட்அப், பிளாஷ்பேக்கில் இளமை என இருக்கும் இந்த படத்தில் நடிக்க குஷ்பு தயங்கினார். பின்னர், கேரக்டர் தன்மை உணர்ந்து நடித்தார் என தகவல்.
5) நடிகன் / கீதா
பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடித்த இந்த படத்தின் காமெடி பற்றி கேட்க வேண்டும். அதிலும், சத்யராஜ், கவுண்டமணி, மனோரமா, குஷ்பு இணைந்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
6) மலபார் போலீஸ் / அம்முக்குட்டி
போலீஸ்காரர் சத்யராஜ் மனைவியாக அம்முக்குட்டி என்ற கேரளத்து பெண்ணாக குஷ்பு வருவார். அவர் மலையாளம் கலந்து பேசுவது அவ்வளவு அழகு. 'பாலக்காட்டு பொண்ணு பம்பரம் போல கண்ணு' பாடலில் குஷ்பு நடிப்பும், எக்ஸ்பிரசனும் பிரமாதமாக இருக்கும். சில சீன்களில் குஷ்பு நடிப்பும் பேசப்பட்டது.
7) சிங்காரவேலன் / சுமதி
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்த படம். சுமதி என்ற அந்த பெண்ணை தேடி, அதுவும் அவரின் சின்ன வயது போட்டோ வைத்துக்கொண்டு கமல் அலைவதுதான் கதை. அந்த போட்டோவில் இருக்கும் பெண் என தெரியாமல் குஷ்புவை காதலிப்பார். 'இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்' பாடலில் குஷ்பு ஸ்டைல், ஐ லவ் யு என சொல்லிக்கொண்டு குஷ்பு ஓடி வர, 'போட்டு வைத்த காதல் திட்டம்' பாடலில் அழகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
8) கிழக்குவாசல் / செல்வி
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் இந்த படத்தில் குஷ்புக்கு கொஞ்சம் மாறுபட்ட கேரக்டர். அவர் கார்த்திக்கை விரும்புவார். அவரோ ரேவதியை விரும்புவார் என கதை செல்லும். பணக்கார திமிர்பிடித்த பெண்ணாகவும், பின்னர், இன்னொரு நடிப்புக்கும் மாறுவார். இந்த படத்தில் நடித்தபோது குஷ்புக்கு தமிழ் தெரியாது என்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருக்கிறார்.
9) நாட்டுப்புற பாடல் / பாரிஜாதம்
பெரும்பாலான படங்களில் மார்டனாக நடித்த குஷ்பு இதில் பக்கா கிராமத்து பெண்ணாக வருவார். நாட்டுப்புற கலைஞராக அவர் ஆட்டம், நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக, 'கொக்கி வெச்சேன், ஒத்த ரூபாய் தர்றேன்' பாடல்களில் அவர் ஆடிய நாட்டுப்புற நடனம் பலரை ஆட வைத்தது. கஸ்துாரிராஜா இயக்கிய இந்த படத்தில் சிவகுமார் ஜோடியாக குஷ்பு நடித்தார்.
10) முறை மாமன் / இந்து
சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக குஷ்பு நடித்த படம். இந்த படத்தின் காமெடி, குஷ்பு கேரக்டர் படத்துக்கு பிளஸ் ஆக அமைந்தன. கிராமத்துச் சூழலுக்கு வரும் ஒரு துடிப்பான, விவரமான நகரத்து பெண்ணாக இந்து கதாபாத்திரத்தில் குஷ்பு கச்சிதமாகப் பொருந்தியிருப்பார். ஹீரோ ஜெயராம் குஷ்புவை ஒருதலைப்பட்சமாகக் காதலிப்பார். குஷ்புவின் வழக்கமான வசீகரமான புன்னகையும், துடுக்கான குறும்புத்தனமான பார்வைகளும் இப்பாத்திரத்திற்குப் கூடுதல் பலம் சேர்த்தன. ஆரம்பத்தில் ஜெயராமை விரும்பாத இந்து, சூழ்நிலை காரணமாக அவரைத் திருமணம் செய்ய நேரிடும். திருமணத்திற்குப் பிறகு அவருக்கு ஏற்படும் உடல்நலக் குறைவின் போது, ஜெயராம் காட்டும் உண்மையான பாசத்தைப் புரிந்து கொண்டு உருகும் என செல்லும் கதை பார்வையாளர்களை கவர்ந்தது.