இளையராஜாவை ஏமாற்றினாரா கார்த்திக் சுப்பராஜ்?
சமூகவலைதளங்களில் ரெகுலராக புழங்கி வருபவர்களுக்கு அவ்வப்போது ஒரு ஹாட் டாபிக் கிடைக்காவிட்டால் அவர்களது தலை வெடித்துவிடும். அப்படி சிக்கும் டாபிக்கை பேனை பெருமாளாக்கி அந்த பெருமாளுக்கு உருமால் கட்டும் வரை ஓயமாட்டார்கள்.
தற்போது அவர்கள் கையில் சூடாக சிக்கியிருக்கும் டாபிக் கார்த்திக் சுப்பாராஜின் 'டோரதி'. இப்பட ரிலீஸுக்கு முந்தைய நாள் முதலே, இது நம் கலாசாரத்திற்கு எதிரான படம். யாரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை ஆதரிக்காதீர்கள். கார்த்திக் சுப்பராஜ் அந்நிய நாட்டு சதிகளில் சிக்கிவிட்டார். மில்லியன் கணக்கான டாலர்களை கையூட்டாக வாங்கிவிட்டார்' என்று தொடங்கி சினிமாக்காரர்களின் கற்பனையையும் மிஞ்சிய உருட்டல்கள்.
ஒரு இயக்குநர் சொல்ல வந்த கருத்தை எதிர்கொள்ள முடியாமல், இப்படி ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்தவர்கள் சந்தடி சாக்கில் ராஜாவின் பாட்டையும் கடிக்கத் துவங்கியதுதான் தமிழ் சமூகத்தின் தாங்கவொண்ணா துயரம்.
'ராஜாவுக்கு இந்த 'டோரதி' படத்தோட முழுக்கதையையும் சொல்லாமலா கார்த்திக் சுப்பராஜ் ஏமாத்திட்டார். நம்ம கலாசாரத்தோட மகிமையைக் கெடுக்கிற படம்னு தெரிஞ்சா ராஜா இந்தப் படத்துக்கு மியூசிக்கே பண்ணியிருக்க மாட்டார். இனிமே புதுபடங்களுக்கு கதை கேக்குறப்ப கொஞ்சம் அலெர்ட்டா இருங்க ராஜா' என்று அவருக்கு அட்வைஸ் வேறு.
இது ஒருபுறமிருக்க, இந்த நோக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இந்தப் படம் தொடர்பாக ராஜா மீது இன்னும் இரு முரட்டு உருட்டல்கள் இப்பட ஆடியோக்கள் ரிலீஸானதிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி அவரது முதல் படத்துக்கு இணையான வரவேற்புகள் கிடைத்தபோது, அவரை ஏதாவது ஒரு காரணத்துக்காக, வசைபாடிக்கொண்டேயிருப்பவர்களில் சிலர், 'அவருக்குத்தான் 84 வயசாயிடுச்சே இன்னும் எதுக்கு பாடுறாரு? …அவரே பாட்டையும் எழுதிட்டாரா ?' என்று இருவிதமாக குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருந்ததை அதிகம் காண முடிந்தது.
முதலில் ராஜா இப்படத்தின் கதை கேட்ட கதைக்கு வருவோம். கார்த்திக் சுப்பாராஜ் தனது பல பேட்டிகளில் சொல்லியிருப்பதுபோல் அவர் இப்படத்தின் கதையை ராஜாவுக்கு 'சொல்லவேயில்லை'.
'படத்தின் கதையை ராஜாவுக்கு சொல்வதை விட மொத்தப் படத்தையும் இயக்கி முடித்து அவருக்கு விஷுவலாக காட்ட வேண்டுமென்று முடிவு செய்து அவரது பல பாடல்களை ரெபரென்ஸாக வைத்துதான் படத்தை இயக்கி முழுப்படத்தையும் அவருக்குப் போட்டுக் காட்டினேன்' என்கிறார் கா.சுப்பராஜ்.
இதில் எங்கே முழுக்கதையையும் கேட்காமல் இளையராஜா ஏமாந்தார்?
ஒரு இசையமைப்பாளராக ராஜா இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர். 'முதல் மரியாதை' படம் எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லி அதற்கு பாடல்கள் மூலமாகவும், பின்னணி இசையாலும் காவிய வடிவம் கொடுத்தவர். இப்படி பல நூறு படங்களை பட்டியலிட முடியும்.
அந்த வரிசைகளில் ஒரு படம்தான் டோரதியும் ராஜாவுக்கு. ஆனாலும் ராஜா இந்தப் படத்தை எந்த அளவுக்கு நேசித்து இசையமைத்திருக்கிறார் என்பதற்கு இவர்களுக்கு இந்த மொத்தப் படமுமே பதில்தான் என்றாலும் இரண்டு அம்சங்களை குறிப்பிட்டாக வேண்டும்.
'மண்ணிலுள்ள தாய்க்கு எல்லாம் மகளாகப் பிறந்தவளே' என்கிற வரிகளை யாருக்கு எதற்காக எழுதியிருக்கிறார். இப்படியெல்லாம் ஒரு மனிதர் சிந்திக்க முடியுமா? என்கிற ஒரு இடம்.
அடுத்தது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் 'அடி வாடீ ராசாத்தி' என்று அவர் குரல் கேட்கத் துவங்கும்போது, ரசிகர்கள் விம்மி வெடிக்கிறார்கள். அந்தக் குரல் நம்மை என்னென்னவோ செய்கிறது.
ராஜா இந்தப் பாடலை, தன் சொந்த மகள் போல் நேசித்து யாருக்காக எழுதிப்பாடினாரோ அவர்கள் எல்லாம் இன்று அவரை உச்சி முகர்ந்து பாராட்டி கண்ணீர் பதிவுகள் போடுகிறார்கள். 'அய்யா சாமி,… இனி எங்க சடங்குகள் எல்லாத்துலயும் இந்தப் பாட்டுதான் இருக்கும்யா' என்று நெகிழ்கிறார்கள்.
ஸோ… பாலின சமத்துவம் குறித்த கதையாடலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு இன்னும் வராமலிருந்தால் நேரடியாக அதுகுறித்த உங்கள் எதிர்ப்புகளை நேரடியாக பதிவு செய்யுங்கள். இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜே…'இந்தப் படம் ஒரு ஆரோக்கியமான உரையாடலைத் துவக்கி வைத்தாலே எனக்கு மகிழ்ச்சிதான்' என்றுதான் கூறுகிறார்.
அதைவிட்டுவிட்டு, வாராது வந்த மாமணியாய் நமக்குக் கிடைத்திருக்கும் இளையராஜாவின் ஸ்டுடியோ கேட்டை ஆட்டவேண்டாம். அவரிடமிருந்து நமக்கு இன்னும் பலநூறு முத்துமணி, பவழமணி, வைரமணி பொக்கிஷப் பாடல்கள் வர வேண்டியிருக்கின்றன.