'லவ்' வெப் தொடரின் கதை இதுதான்
7 வருடங்களுக்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கி உள்ள வெப் தொடர் ‛லவ்'. இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றி, தயாரிக்கவும் செய்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளனர். வருகிற 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தொடரின் கதை சுருக்கம் இதுதான் : திருமணத்திற்கு மணமக்கள் தேட மேட்ரிமோனி டாட் காம்கள் இருப்பது போன்று இந்த கதையின் நாயகன், நாயகி இருவரும் 'பவுண்ட்' மற்றும் 'பைன்ட் பீ' என இரண்டு ஆப்களை நடத்துகிறார்கள். காதலன், காதலி வேண்டுவோர் இதில் பதிவு செய்தால் எந்த மாதிரியான ஜோடிகளை விரும்புகிறார்களோ அந்த ஜோடியை தேடித் தரும் அதோடு காதல், திருமணம் குறித்த அறிவுரைகளையும் வழங்கும்.
இந்த தொழில் போட்டியில் நாயகன் அர்ஜுன் தாஸும், நாயகி ஐஸ்வர்ய லட்சுமியும் மோதிக் கொள்கிறார்கள். காரணம் இருவருக்கும் காதல் என்றால் என்ன என்பதை பற்றிய வெவ்வேறு பார்வைகள் இருக்கிறது. இந்த இருவரின் மோதலுக்கு இடையே அவர்களுக்குள் காதல் பூத்து விடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இது குறித்து இயக்குநர் பாலாஜி மோகன் கூறும்போது “காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன். ஆண்கள் பெண்களைப் பற்றியும், பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்து கொள்வது என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.
காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில், எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காதலை எப்போதும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வைத்திருக்கிறது. அதனால்தான் காதல் கதைகளை தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.
என்னுடைய படைப்புகளைப் பார்த்து ரசிகர்கள் காதல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும், தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.
அந்த வகையில்தான் இந்த தொடரையும் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.