பஹத் பாசிலின் ஹிந்தி படம் கைவிடப்பட்டது ஏன்? : இயக்குனர் இம்தியாஸ் அலி விளக்கம்
நடிகர் பஹத் பாசில் தற்போது தென்னிந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். அடுத்ததாக துல்கர் சல்மானை போல இவரும் பாலிவுட்டில் கால் வைக்க வேண்டியது தான் பாக்கி. அந்த வாய்ப்பும் பிரபல இயக்குனரும் தமாஷா, லைலா மஜ்னு, காக்டெயில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் இம்தியாஸ் அலி மூலமாக தேடி வந்தது. படத்திற்கு இடியட் ஆப் இஸ்தான்புல் என்ற டைட்டிலும் வைக்கப்பட்டது. நாயகியாக அனிமல் புகழ் திர்ப்தி டிமிரி நடிப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அறிவிப்புக் கூட வெளியாகாமல் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஜாக்ரன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் இம்தியாஸ் அலி கூறும்போது, “பஹத் பாசிலும் நானும் இணைந்து பணியாற்ற முயன்றோம், ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது, நிறைவேறாமல் போனது. இருப்பினும் அவருடன் இணைந்து பணிபுரியும் ஆர்வம் எனக்கு இன்னும் இருக்கிறது, நாங்கள் இப்போதும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். எதிர்காலத்தில் நிச்சயம் எப்போதாவது அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்..