நிவின்பாலி மீதான மோசடி வழக்கு ; சமாதான உடன்படிக்கையால் நீதிமன்றம் ரத்து
நடிகர் நிவின்பாலி கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'ஆக்சன் ஹீரோ பைஜூ' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கினார். இதன்பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மகாவீர்யர்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அந்த படம் நஷ்டத்தை சந்தித்தது. அந்த படத்திற்காக பைனான்ஸ் செய்திருந்த தயாரிப்பாளர் பி.எஸ். ஷாம்னாஸ் என்பவர் தனக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், அடுத்ததாக தாங்கள் எடுக்க இருக்கும் ஆக்சன் ஹீரோ பைஜூ படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னையும் ஒரு தயாரிப்பாளராக பங்கு சேர்ப்பதாக உத்தரவாதம் தந்தார்கள் என்றும், ஆனால் அதன்படி நடந்து கொள்ளாமல் 1.9 கோடி வரை மோசடி செய்து விட்டார்கள் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நிவின்பாலியும் தன் கையெழுத்தை பைனான்சியர் ஷாம்னாஸ் போலியாக பயன்படுத்தியதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இருபுறமும் இழுபறியில் இருந்த நிலையில், தற்போது இரு தரப்பினரும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்த்துக் கொண்டோம் என்றும், தற்போது தங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் இவர்கள் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது.