விழாவுக்கு வராத நயன்தாராவை புகழ்ந்த 'மூக்குத்தி அம்மன் 2' படக்குழு
சென்னையில் நேற்று நடந்த 'மூக்குத்தி அம்மன் 2' பட ப்ரீ ரீலிஸ் ஈவன்ட்டில் இயக்குனர் சுந்தர்.சி, நடிகைகள் குஷ்பு, ஊர்வசி, இனியா, ரெஜினா மற்றும் யோகிபாபு, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், கதையின் நாயகி அம்மனாக, போலீசாக நடித்துள்ள நயன்தாரா விழாவில் ஆப்சென்ட். அது குறித்து விசாரித்தால் அவர் ரஜினியுடன் 'தர்மன்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என தகவல் வந்தது.
நயன்தாரா குறித்து பேசிய சுந்தர்.சி, ''படப்பிடிப்பில் கடுமையாக உழைத்தார். அவருக்கு சில பிரச்னைகள் வந்தபோது கோவை மாசாணி அம்மன் கோயில் சென்று வந்தார். விரதம் இருந்து நடித்தார்'' என்றார். தயாரிப்பாளர் ஐசரி கணேசும் முதற்பாகம் மாதிரியே இந்த பாகத்தில் நடித்தபோதும் நயன்தாரா விரதம் இருந்தார். அசைவம் சாப்பிடவில்லை என்றார். படக்குழுவில் பலரும் அவரை பாராட்டினார்கள். ஒரு காட்சியில் ஒரே இடத்தில் 4 மணி நேரம் உட்கார்ந்து இருந்தார் என்றும் கூறினார்கள்.
இந்த படத்தில் வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் நயன்தாரா நடித்து இருப்பதாக தகவல். அவருக்கு சம்பளம் கிடையாது. அதற்கு பதில் பங்கு அடிப்படையில் பல கோடி கிடைத்து இருக்கும். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறுகிற நடிகையாக நயன்தாரா தொடர்கிறார் என்கிறார்கள். கதைப்படி, வில்லியாக ரெஜினா வருகிறாராம். கர்ப்பிணியாக கவுரவ வேடத்தில் இனியா நடித்து இருக்கிறார். குஷ்பு கண்டிப்பாக இருப்பார், அவருக்கு என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ். அவர் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கலாம். அரண்மனை 4 படத்தில் சிம்ரனுடன் இணைந்து அவர் டான்ஸ் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த 'டாக்சிக்' பட நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார். படம் குறித்து விரிவாக பேசினார். ஆனால், தமிழ் படத்தை புறக்கணிக்கலாமா? மாலை 7 மணிக்குமேல்தான் நிகழ்ச்சி நடந்தது. ரஜினியிடம், தர்மன் படக்குழுவிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கு வந்து இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக அவர் தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது தொடர்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.