பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி உடல்நிலை குறித்து பரவும் வதந்தி
பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி (86) சென்னையில் வசித்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து நேற்று இரவும், இன்று காலையும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதை கேள்விப்பட்டவர்கள், அவருடைய ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். இது குறித்து எல்.ஆர்.ஈஸ்வரி தரப்பில் விசாரித்தால், இப்போதும் உற்சாகமாக, நல்ல உடல்நலத்துடன் எல்.ஆர்.ஈஸ்வரி இருக்கிறார். சமீபத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் அவரை நேரில் சந்தித்து பேசினார். அந்த போட்டோக்கள் வெளியாகின. எப்போதும் இளமையாக, புல் மேக்கப்பில் இருப்பவர், அந்த போட்டோவில் தலை முடிக்கு டை அடிக்காமல் நரை முடியுடன் இருந்தார். அந்த போட்டோ வைரல் ஆனது.
சில தினங்களுக்கு முன்பு கூட, அவருடன் சிலர் எடுத்த போட்டோ வைரல் ஆனது. இந்நிலையில் இப்படிப்பட்ட வதந்தி பரவுகிறது. அது தவறு. அவர் நல்ல உடல்நலத்துடன் வீட்டில் இருக்கிறார். சமீபத்தில் அவர் காலில் அடிபட்டதால் கச்சேரிகள் செய்வது இல்லை. கொஞ்சம் ஓய்வில் இருக்கிறார். வெளியிடங்களுக்கும் அதிகம் செல்வது இல்லை.''என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
லுார்துமேரி ராஜேஸ்வரி என்ற இயற்பெயரை உடைய எல்.ஆர்.ஈஸ்வரி 1958ம் ஆண்டு முதல் பாடத்தொடங்கி 2020ம் ஆண்டு வெளியான 'மூக்குத்தி அம்மன்' படம் வரை பாடியிருக்கிறார். ஆயிரக்கணக்கான மேடைகளில் பாடியிருக்கிறார். அதேபோல் ஏகப்பட்ட அம்மன் பாடல்களையும் பாடியிருக்கிறார்.