ஒரு வழியாக டைட்டானிக்கிற்கு விடுதலை ; புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
புதிய நட்சத்திரங்களையும் புது இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களங்களுடன் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தவர் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் சி வி குமார். அப்படி 10 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் எம் ஜானகிராமன் என்பவரை வைத்து இவர் தயாரித்த படம் ‛டைட்டானிக்'. இந்த படத்தில் கலையரசன், ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர் இவர்கள் தவிர காளி வெங்கட். சேத்தன். ஆஸ்னா சவேரி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரானது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. ஆனால் டைட்டானிக் என டைட்டில் வைத்ததாலோ என்னவோ படம் பல்வேறு பிரச்னைகளால் வெளியாகாமல் தள்ளிப்போனது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்தப் படம் 4 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அக்.,16க்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தினத்திலும் படம் ரிலீசாகவில்லை. தற்போது அனைத்து தடைகளையும் தாண்டி ஒரு வழியாக வரும் அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனதுக்கு நெருக்கமான ஒரு ஜாலியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக டைட்டானிக் உருவாகி இருக்கிறதாம்.