பிளாஷ்பேக்: குறைவான நாட்களில் தயாராகி நிறைவான வசூலைப் பெற்றுத் தந்த “குரு சிஷ்யன்”
தமிழ் சினிமா உலகில் ஒரு அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாகவே தன்னை அடையாளப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் ஆதர்ச நாயகனாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரம் என்ற உயரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் அபூர்வ நடிகர்தான் நடிகர் ரஜினிகாந்த். ஒரு அதிரடி ஆக்ஷன் நாயகனாக, இவர் வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு திரைப்படங்கள் வரை நடித்து வந்த 1980களின் காலகட்டங்களில், தனது அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களுக்கு இடையே “தில்லு முல்லு”, “தம்பிக்கு எந்த ஊரு” போன்ற ஓரிரு திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பிற்கும் முக்கியத்துவம் தந்து, தன்னிடம் உள்ள நகைச்சுவை நடிப்புத் திறனையும் வெளிக்காட்டி வந்த வேளையில் வந்த அவரது மற்றொரு நகைச்சுவை கலந்த அதிரடி வெற்றித் திரைப்படம்தான் இந்த “குரு சிஷ்யன்”.
“ஆறிலிருந்து அறுபதுவரை”, “கழுகு”, “எங்கேயோ கேட்ட குரல்”, “தம்பிக்கு எந்த ஊரு” போன்ற நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களைத் தனது “பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்தவர் திரைக்கதாசிரியரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம். இவருக்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த மற்றுமொரு நகைச்சுவை கலந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வந்ததுதான் இந்த “குரு சிஷ்யன்”. பஞ்சு அருணாச்சலம் நிதி நெருக்கடியில் இருந்தபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் எடுக்குமாறு பரிந்துரைத்து, அதன்படி அவரே நடிகர் ரஜினிகாந்திடம் சம்மதமும் பெற்றுவிட்டிருந்த நிலையில், 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தருவதாகவும் அதற்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்து, இயக்குநர் எஸ் பி முத்துராமனிடம் கதையை தயார் செய்யுமாறு நடிகர் ரஜினிகாந்த்தும் கூறிவிட, இயக்குநர் எஸ் பி முத்துராமனும் தீவிரமானார்.
படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் வருவதாக இருந்தால், அவரது ரசிகர்களும் விரும்பமாட்டார்கள். பட விநியோகஸ்தர்களும் படத்தை வாங்க சுணக்கம் காட்டுவர். அதனால் படத்தின் வசூல் பாதிப்படையும் என்று தனது ஆட்சேபனையை நடிகர் ரஜினிகாந்திடம் எடுத்துக் கூறி, அவரிடமிருந்து 25 நாட்கள் கால்ஷீட் பெற்றார் இயக்குநர் எஸ் பி முத்துராமன். ஒரு படத்தை எடுத்து முடிக்க குறைந்தது 45 நாட்களாவது தேவைப்பட்டு வந்த அந்தக் காலகட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தின் 25 நாட்கள் கால்ஷீட்டை சரியாகப் பயன்படுத்தி இயக்குநர் எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்த “குரு சிஷ்யன்” திரைப்படம், 1987ம் ஆண்டு நடிகர் தர்மேந்திரா, ஜிதேந்திரா, அனிதாராஜ், பானுப்ரியா ஆகியோர் நடித்து வெளிவந்த “இன்சாப் கி புகார்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.
நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் பிரபு இணைந்து நடித்த முதல் திரைப்படமான இத்திரைப்படத்தில் ரஜினியின் நகைச்சுவை நடிப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் இயக்குநர் எஸ் பி முத்துராமன். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஜெயஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவருடைய திருமணம் காரணமாக அவர் படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட, நடிகை கவுதமி அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமானார். தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக கவுதமி அறிமுகமான திரைப்படமும் இதுவே. ரஜினிகாந்த், பிரபு, கவுதமி, சீதா, ரவிச்சந்திரன், மனோரமா, சோ, ராதாரவி, பாண்டியன், வினு சக்ரவர்த்தி, சுதா, செந்தாமரை என பலர் நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இயக்குநர் எஸ் பி முத்துராமன் படத்தை இயக்க, திரைக்கதை அமைத்து, தனது “பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ்” சார்பில் பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்த இத்திரைப்படம், 175 நாட்கள் வரை ஓடி, ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக அமைந்ததோடு, வசூல் ரீதியாகவும் பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அவருக்கு அமைந்திருந்தது.