விமர்சனங்களுக்கு பதில் சொல்லாவிட்டால் திமிர் என்று பொருளா?: அனுபமா பரமேஸ்வரன்
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் நடிகர் துருவ் விக்ரமுடன் காதல் முறிவு ஏற்பட்டு மன குழப்பத்தில் இருந்து வெளிவந்த அவர், காதலரின் பெயரை குறிப்பிடாமல் அவரை பற்றிய பரபரப்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு படத்தைப் பார்த்தபிறகு, அதன் மீதான விமர்சனங்கள் எப்போதும் வேண்டும். ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி நேர்மையாக விமர்சிப்பவர்களின் விவாதத்தில் பங்கேற்க எனக்கு ஆர்வம் உண்டு. அதுபோன்ற விவாதங்கள் நம்மை வளர்க்க உதவும். ஆனால் சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாகவோ, பணம் பெற்றுக் கொண்டோ ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை.
சமூக வலைதளங்களில் வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் நான் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பதில் சொல்லாவிட்டால் திமிர் என்று பொருள் இல்லை. பதில் சொன்னால், 'வேலை இல்லையா?' என்கிறார்கள். இந்த அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு பிடித்த பதிவுகளுக்கு கருத்து தெரிவிப்பது என் விருப்பம். அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதற்கு யாரிடமும் நான் அனுமதி கேட்க வேண்டியதில்லை. எனக்கு ஓய்வு நேரம் இருந்தாலும், அது இல்லாததுபோல் நான் ஏன் நடிக்க வேண்டும்?. இவ்வாறு கூறியுள்ளார்.