உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஐ மூலம் போலி உருவம் : பாதுகாப்பு கோரி டில்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய கிர்த்தி சனோன்!

ஏஐ மூலம் போலி உருவம் : பாதுகாப்பு கோரி டில்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய கிர்த்தி சனோன்!


பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன், தனது பெயர், புகைப்படம், தோற்றம் மற்றும் தனது அடையாளத்தின் பிற அம்சங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக, தனது ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஏஐ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் முறையில் போலி உருவம் உருவாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராகவும் அவரது மனு அமைந்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் அடங்கிய தனிநீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஆளுமை உரிமைகள் தொடர்பான சட்டப்பூர்வ கேள்விகள் குறித்த தொடர்புடைய தீர்ப்புகள், ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆவணங்களாக சமர்ப்பிக்குமாறு கிருதியின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகையின் சட்டக் குழு சமர்ப்பிக்கும் தீர்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களை ஆய்வு செய்த பிறகு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு வருகிற அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதுபோன்று, ஏஐ பயன்பாடுகளுக்கு எதிராக பாதுகாப்பு கோரி மேலும் பல சினிமா பிரபலங்கள் மற்றும் பொது பிரமுகர்கள் தொடர்ந்த பல வழக்குகளை டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்திய மாதங்களில் விசாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !