தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு : ராக்கி சாவந்த்துக்கு பிடிவாரண்ட்
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தனது கவர்ச்சியான நடிப்பு மற்றும் அப்போது பரபரப்பு ஏற்படுத்தும் செயல்களால் ரசிகர்களிடம் பிரபலமானவர். அப்படி கடந்த 2010ல் ராக்கி கா இன்சாப் என்கிற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை இவர் தொகுத்து வழங்கினார். நம்ம ஊரில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கு லக்ஷ்மன் அகிர்வார் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் அவர்கள் குடும்ப பிரச்சினை குறித்து பேசுவதற்காக அழைத்து இருந்தனர். அப்போது லக்ஷ்மன் அகிர்வாரை அவமதிக்கும் விதமாக கடுமையான வார்த்தைகளில் ராக்கி சாவந்த் பேசியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான லக்ஷ்மன் அகிர்வார் அதே ஆண்டு நவம்பர் 10ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ராக்கி சாவந்த் தான் காரணம் என லக்ஷ்மன் அகிர்வாரின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால் இது குறித்த வழக்கில் நீதிமன்றம் பலமுறை ராக்கி சாவந்த்தை நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டு வந்தும் அவர் அதை இத்தனை வருடங்களாக தவிர்த்து வந்தார். இந்த நிலையில் விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ராக்கி சாவந்த்துக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி இந்த வழக்கு நடைபெற இருக்கிறது.