உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் பாகத்தை மிஸ் பண்ணியவருக்கு ஜெயிலர் 2வில் மூன்று சாய்ஸ் கொடுத்த நெல்சன்

முதல் பாகத்தை மிஸ் பண்ணியவருக்கு ஜெயிலர் 2வில் மூன்று சாய்ஸ் கொடுத்த நெல்சன்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியை பொறுத்தவரை ஜெயிலர் படமாகட்டும் அல்லது தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படம் ஆகட்டும் மற்ற மொழிகளின் அவ்வளவு பிரபலமில்லாத மற்றும் ஓரளவு வளர்ந்து வருகின்ற பல நட்சத்திரங்கள் இந்த இரண்டு பாகங்களிலும் நடித்து மிகப்பெரிய அளவில் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் குடும்ப உறுப்பினராக அவரது வலது கையாகவே கூடவே வரும் சார்வா கல்பாக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹக்கீம் ஷாஜகானுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது மிக சுவாரசியமான ஒன்று.

மலையாளத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பிரியாணி, சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஜெயிலர் முதல் பாகம் உருவாகும்போதே தனது புகைப்படங்களை அனுப்பி வைத்தாராம் ஹக்கீம் ஷாஜகான். ஆனால் அந்த படத்திற்கு அவருக்கு அழைப்பு வரவில்லை. ஆனால் அந்த படம் வெளியான சமயத்தில் கேரளாவில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு சென்று பார்த்தபோது மக்கள் எவ்வளவு ஆரவாரமாக அதை கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்ததும் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க முடியாமல் போனதே என்கிற வருத்தம் அவருக்கு ஏற்பட்டதாம்.

ஆனால் ஆச்சரியமாக இந்த முறை ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கு நெல்சன் தரப்பிலிருந்து நேரடியாக ஆடிஷன் வரச் சொல்லி ஹக்கீம் ஷாஜகானுக்கு அழைப்பு வந்துள்ளது. படத்தில் முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் ஏதாவது ஒன்றில் அவரை நடிக்க சொல்லலாம் என முடிவு செய்து வைத்திருந்தாராம் நெல்சன். ஆனாலும் உருவத்தோற்றம், உடல்மொழி எல்லாவற்றையும் கணக்கிட்டு தற்போது எஸ்ஜே சூர்யா உடன் படம் முழுவதும் வலம் வருகின்ற சர்வா கல்பாக் என்கிற கதாபாத்திரத்தை கொடுத்தாராம். முதல் பாகத்தில் மிஸ் ஆனது இரண்டாம் பாகத்தில் நிறைவாகவே கிடைத்து விட்டது என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார் ஹக்கீம் ஷாஜகான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !