தடகள வீராங்கனை வித்யா ராமராஜை பாராட்டி கவுரவித்த ரஜினிகாந்த்
தடகளத்தில் சாதித்த வித்யா ராமராஜை தமிழகமே கொண்டாடி வருகிறது. அரசியல் தாண்டி திரைப்பிரபலங்கள் பலரும் அவரை அழைத்து பாராட்டி வருகின்றனர். நேற்று நடிகர் தனுஷ் அவரை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். இன்று (அக்., 8) நடிகர் ரஜினிகாந்த் கவுரவித்துள்ளார்.
சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வித்யாவை வரவழைத்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி, தனது வாழ்த்துகளை தெரிவித்தார் ரஜினி. அவருடன் ரெட் ஜெயன்ட்டின் செண்பமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவையை சேர்ந்த வித்யா ராமராஜ், தடகளத்தில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்து வருகிறார். நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார்.
சூரியும் வாழ்த்து
வித்யா ராமராஜை, நடிகர் சூரி நேரில் சந்தித்து, அவரது வெற்றிக்குப் பாராட்டுகளையும், மேலும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.