கர்நாடகா : செப்டம்பர் 30 முதல் சினிமா டிக்கெட் கட்டண உயர்வு
கர்நாடகா மாநிலத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் சினிமா டிக்கெட் கட்டணம் 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
கர்நாடக சினிமா மற்றும் கலாச்சாரத் தொழிலாளர்களின் நல மேம்பாட்டிற்கான 2024ம் ஆண்டு சட்டத்தின் கீழ் 2 சதவீத நலத்திட்ட செஸ் வரியாக அந்த 2 சதவீதக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சினிமா மற்றும் கலாச்சாரத் துறைகளில் பணி புரியம் ஊழியர்களுக்கான நல நிதியாக அது செலவிடப்படும்.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநில அரசு சினிமா டிக்கெட் கட்டண உயர்வு குறித்த சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதன்பின்பு கெஜட்டில் இந்த ஆணை வெளியிடப்பட்டு செப்டம்பர் 30ம் தேதி முதல் அமலாகும் என்று தெரிவித்திருந்தது.
இந்த 2 சதவீத உயர்வு கட்டணத்தை தியேட்டர்காரர்களே அந்த உயர்வை ஏற்றுக் கொள்வதா அல்லது அதை படம் பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து வசூலிப்பதா என்பதை பரிசீலித்து வருகிறதாம்.
உதாரணமாக டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் என்றால் கூடுதலாக 4 ரூபாய் கட்டணம் உயரும். அக்டோபர் மாதம் முதல் பல புதிய திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளன. கர்நாடகாவில் பெங்களூரு மாநகரம் கன்னடம் மட்டுமல்லாது மற்ற மொழிகளான தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களையும் திரையிடும் ஒரு முக்கிய நகரமாக உள்ளது.
இந்தியாவில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இப்படி பார்க்க முடியாது. இந்த சிறிய கட்டண உயர்வு தொழிலாளர்களுக்கானது என்பதால் அதிக விமர்சனம் வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.