நடிகர் சங்க கட்டடம்: டிசம்பருக்குள் திறக்கிறார் முதல்வர் விஜய்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்.,27) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், இந்த பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. இதில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள், நடிகர் சங்க கட்டடம் நிதி மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டன.
மூத்த நடிகை லதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் நாசர் பேசியதாவது: முதலில் நம்மில் ஒருவராக இருந்து முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். நடிகர் சங்க உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் தவறாக பேசிய ஒன்பது நபர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இனிவரும் காலங்களில் பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்டவர்களும் போலீசில் புகார் கொடுக்க வேண்டும். அது சட்ட நடவடிக்கைகளுக்கு வலுவாக இருக்கும்.
இன்றைக்கு ஏ.ஐ உள்ளிட்ட பல தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கொஞ்சம் பின் தங்கி இருக்கிறோம். புது தொழில்நுட்பம் குறித்து பயிற்சி கொடுக்க பட்டறைகள் உருவாக்கப்படும். நடிகர் சங்க புது கட்டடம் இரண்டு மாதங்களில் வந்துவிடும். அதை வருங்காலத்தில் பாதுகாக்க வேண்டும். அதை தவறாக பயன்படுத்த கூடாது. அதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு பொதுக்குழு கூட்டப்படும். தமிழக முதல்வர் விஜய் அவர்களால் நடிகர் சங்க புது கட்டடம் வெகு விரைவில் திறக்கப்படும் அது ஒரு வரலாறு. இவ்வாறு அவர் பேசினார்.
பொருளாளர் கார்த்தி பேசுகையில், ''வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதை போல் சங்கத்தை கட்டிப்பார் என்பது புது பழமொழியாகி உள்ளது. அந்த அளவுக்கு அதில் கஷ்டம் உள்ளது. நடிகர் சங்க புது கட்டட பணிகள் இன்னும் 45 நாட்களில் நிறைவடையும். ஒரு மாதம் டெஸ்ட் வேலைகள் நடக்கும். டிசம்பர் மாத தொடக்கத்திற்குள் புது கட்டடம் திறக்க ஏற்பாடுகள் நடக்கிறது'' என்றார்.
நடிகை குஷ்பு பேசுகையில், ''நடிகர் சங்கம் என்பது நமது குடும்பம் போன்றது. சங்கம் என்று சொன்னால் சங்கமம். இந்த சங்கத்தில் ஒவ்வொருவர் மீதான அன்பும் ஒற்றுமையும் எப்போதும் நீடிக்க வேண்டும். என்ன பிரச்னை இருந்தாலும் அதை ஒன்றாக இணைந்து சரி செய்யும் சக்தி நம்மிடம் உண்டு. பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், சங்கத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது என்னுடைய குடும்பம். இதற்காக மாபெரும் கட்டடம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். திறப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
இந்த பொதுக்குழுவில் தற்போதுள்ள நடிகர் சங்க நிர்வாகமே 2028 வரை தொடர்ந்திட மீண்டும் உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் சங்க உறுப்பினர்கள் இனி தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்வது கட்டாயம், சமூக வலைதளங்களில் நடிகர்/நடிகைகள் பற்றி ஆபாசமாக, அவதூறாக பதிவிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்குவது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.