உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜேம்ஸ் பாண்ட் : 60 ஆண்டுகளைக் கடந்த உளவாளியின் முழு வரலாறு! - சீன் கானரி முதல் ராபர்ட் பேட்டின்சன் வரை...!!

ஜேம்ஸ் பாண்ட் : 60 ஆண்டுகளைக் கடந்த உளவாளியின் முழு வரலாறு! - சீன் கானரி முதல் ராபர்ட் பேட்டின்சன் வரை...!!

'The Name is Bond. James Bond!'

உலக சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தை அடையாளம் காட்டும் அளவுக்கு புகழ் பெற்ற வசனம். கடந்த வாரம் தமிழில் வெளியாகியிருக்கும் 'ஓம்' படத்தில் தனுஷ் காவல் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைப் போல இந்த பாண்ட் பாத்திரம் உலகம் முழுக்க காப்பி அடிக்கப்பட்டாலும் ஒரிஜினல் பாண்டுகளுக்கு இணை இன்னொரு பாண்ட் மட்டுமே.

உலக சினிமாவில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே காலத்தைக் கடந்து வாழ்கின்றன. சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு இணையாக, நிஜ மனிதர் போல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட் - 007.



கையில் துப்பாக்கி, அழகான உடை, குளிர்ச்சியான பார்வை, ஆபத்தான எதிரிகள், அழகான பெண்கள், அதிநவீன கார்கள், உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் உளவு நடவடிக்கைகள் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் அடையாளம்.

1962-ல் தொடங்கிய இந்தத் திரைப்படத் தொடர், ஆறு தசாப்தங்களைக் கடந்து இன்றும் உலக சினிமாவின் மிகப்பெரிய திரைப்பட பிராண்டுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பயணத்தில் ஆறு நடிகர்கள் அதிகாரப்பூர்வமாக ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு விதமான முகத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஜேம்ஸ் பாண்ட் உருவான கதை

ஜேம்ஸ் பாண்ட் முதலில் திரைப்படக் கதாபாத்திரம் அல்ல. பிரிட்டிஷ் எழுத்தாளர் இயான் ப்ளெமிங் எழுதிய நாவல்களின் கதாநாயகன். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் கடற்படையின் உளவுத்துறைப் பிரிவில் இவர் பணியாற்றினார். உளவுத்துறை அனுபவங்களையும், அன்றைய சர்வதேச அரசியல் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.



1953-ல் வெளியான Casino Royale அவரது முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல். மொத்தம் 12 ஜேம்ஸ் பாண்ட் நாவல்களையும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதினார். ஜேம்ஸ் பாண்டின் 007 என்ற அடையாளம் மிகவும் முக்கியமானது. பிரிட்டிஷ் உளவுத்துறையான MI6-ல் அவர் பணியாற்றுகிறார். 007 பிரிவில் இருப்பவர்கள் தேவையான சூழ்நிலையில் எதிரிகளைச் சுட்டுக் கொல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என்பதுதான் கதையின் அடிப்படை.

முதல் ஜேம்ஸ் பாண்ட் - சீன் கானரி (1962-1971)



1962-ல் வெளியான Dr. No திரைப்படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் உலக சினிமாவுக்கு அறிமுகமானார். பாண்டாக நடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சீன் கானரி (Sean Connery). அவரது உடல்மொழி, கம்பீரமான குரல், பெண்களிடம் பேசும் லாவகம், எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவை பாண்ட் கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவத்தை உருவாக்கின. சீன் கானரி 1971-ல் Diamonds Are Forever படத்துடன் அதிகாரப்பூர்வமாக விலகினார். ஆனால் 1983-ல் EON நிறுவனம் தயாரிக்காத Never Say Never Again படத்தில் மீண்டும் பாண்டாக நடித்தார்.

ஜார்ஜ் லேஸன்பி - ஒரே ஒரு படம் (1969)



சீன் கானரி விலகிய பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடத்திற்குப் புதிய நடிகரைத் தேடியது தயாரிப்பு நிறுவனம். அப்போது மாடலிங் துறையில் இருந்த ஆஸ்திரேலிய நடிகர் ஜார்ஜ் லேஸன்பி (George Lazenby) தேர்வு செய்யப்பட்டார். அவர் நடித்த ஒரே அதிகாரப்பூர்வ பாண்ட் திரைப்படம்: On Her Majesty's Secret Service இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் திருமணம் செய்து கொள்வதாகக் கதை அமைக்கப்பட்டது. அவருடைய மனைவி டிரேசி பாண்ட் கொல்லப்படுவது பாண்டின் வாழ்க்கையில் மிகப்பெரிய உணர்ச்சிகரமான திருப்பமாக அமைந்தது. இந்தப் படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பின்னாளில் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களால் குறிப்பிடத்தக்க படமாகக் கொண்டாடப்பட்டது. லேஸன்பி மீண்டும் பாண்டாக நடிக்க வாய்ப்பிருந்தும், அந்தப் பாத்திரத்தில் தொடர்ந்து நடிக்காமல் விலகினார்.

ரோஜர் மூர் - நகைச்சுவையும் சாகசமும் கலந்த பாண்ட் (1973-1985)



ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு புதிய பாணியை உருவாக்கியவர் ரோஜர் மூர் (Roger Moore). சீன் கானரியின் பாணி சற்றுக் கடுமையானதாக இருந்தது என்றால், ரோஜர் மூரின் பாணியில் நகைச்சுவை, கேலியான வசனங்கள், சாகசங்கள் ஆகியவை அதிகமாக இருந்தன. குறிப்பாக The Spy Who Loved Me மற்றும் Moonraker ஆகியவை அவரது காலத்தின் முக்கியமான படங்கள். 1973 முதல் 1985 வரை ஏழு படங்களில் நடித்ததன் மூலம், அதிகாரப்பூர்வ EON தொடர் பாண்ட்களில் அதிகப் படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையை ரோஜர் மூர் பெற்றார்.

திமோத்தி டால்டன் (1987 - 1989)



ரோஜர் மூருக்குப் பிறகு பாண்டாக வந்தவர் திமோத்தி டால்டன் (Timothy Dalton). இவர் பாண்ட் கதாபாத்திரத்தை மீண்டும் அதன் அடிப்படை உளவாளி தன்மைக்குக் கொண்டு வந்தார். இரண்டு படங்களில்தான் நடித்திருந்தாலும், பின்னாளில் வந்த டேனியல் கிரேக்கின் பாண்ட் கதாபாத்திரத்திற்கு டால்டனின் அணுகுமுறை ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.

பியர்ஸ் ப்ராஸ்னன் - நவீன தொழில்நுட்ப பாண்ட் (1995-2002)



தொலைக்காட்சித் தொடரான Remington Steele மூலம் புகழ்பெற்றிருந்த பியர்ஸ் ப்ராஸ்னன்(Pierce Brosnan), 1995-ல் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமானார். அவரது முதல் படம் கோல்டன் ஐ (Golden Eye). டுமாரோ நெவர் டைஸ், தி வேல்டு இஸ் நாட் எனப், டை அனாதர் டை ஆகியவை இவர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள். நவீன தொழில்நுட்பங்களின் ஜேம்ஸ்பாண்ட் ஆக இவர் வலம் வந்தார்.

டேனியல் கிரேக் (2006 - 2021)

பியர்ஸ் ப்ராஸ்னனுக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் தேர்வு செய்யப்பட்டவர் டேனியல் கிரேக் (Daniel Craig). 2005-ல் இவர் தேர்வு செய்யப்பட்டபோது ஒரு சர்ச்சை எழுந்தது. அதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்கள் பெரும்பாலும் கருமையான தலைமுடியுடன் இருந்த நிலையில், பொன்னிற முடியுடன் இருந்த டேனியல் கிரேக் பாண்டாகப் பொருந்துவாரா என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் 2006-ல் வெளியான Casino Royale அந்த விமர்சனங்களுக்கு வலுவான பதிலாக அமைந்தது.

Quantum of Solace (2008)
முந்தைய படத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. காதலியின் மரணத்துக்குப் பழிவாங்கும் உணர்வுடன் பாண்ட் செயல்படுகிறார்.



Skyfall (2012)
இந்தப் படம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. பாண்டின் கடந்த காலம், அவரது முதலாளி M உடனான உறவு, MI6 அமைப்பின் மீதான தாக்குதல் ஆகியவை கதையின் மையமாக அமைந்தன. ஜூடி டென்ச் நடித்த M கதாபாத்திரமும் இதில் முக்கியமானது.

No Time to Die (2021)
டேனியல் கிரேக்கின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம். இந்தப் படத்தில் பாண்ட் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல், குடும்பம் ஆகியவற்றுடன் தொடர்புடைய முடிவுகளை எதிர்கொள்கிறார். மிகவும் அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் இதில் இடம்பெற்றது. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் இறப்பதாக முடியும் முதல் அதிகாரப்பூர்வ EON திரைப்படம் இதுதான். இதன் மூலம் டேனியல் கிரேக்கின் 15 ஆண்டுகால பாண்ட் பயணம் முடிவுக்கு வந்தது.

ராபர்ட் பேட்டின்சன்



டேனியல் கிரேக் விலகிய பிறகு அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற கேள்வி ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. அந்தக் கேள்விக்கு 2026 நவம்பர் 16 அன்று விடை கிடைத்தது. ராபர்ட் பேட்டின்சன் (Robert Pattinson) புதிய ஜேம்ஸ் பாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். டிவலைட் சாகா திரைப்படத் தொடர் மூலம் உலகப் புகழ்பெற்றவர் ராபர்ட் பேட்டின்சன். பின்னர் The Batman (2022), Tenet, The Lighthouse, Mickey 17 போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

1962-ல் சீன் கானரி அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் பாண்ட், ரோஜர் மூரின் நகைச்சுவை கலந்த சாகசங்களைக் கடந்து, பியர்ஸ் ப்ராஸ்னனின் நவீன தொழில்நுட்ப உலகத்திற்குள் நுழைந்து, டேனியல் கிரேக்கின் உணர்ச்சிகரமான மனிதராகப் பரிணமித்தார். இப்போது ராபர்ட் பேட்டின்சனின் கையில் 007 பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் என்று அடுத்த ஆண்டில் பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !