உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வன்முறையை விட பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுங்கள் : உலக அமைதி விருதுகள் விழாவில் ஷாருக்கான் பேச்சு

வன்முறையை விட பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுங்கள் : உலக அமைதி விருதுகள் விழாவில் ஷாருக்கான் பேச்சு

மும்பையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற, உலக அமைதி விருதுகள் விழாவில், திரையுலகின் பல முக்கியப் பிரபலங்களுடன் நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் உரையாற்றிய அவர், வன்முறையை விட பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் பல்வேறு வேண்டுகோள்களையும் விடுத்தார்.

நடிகர்கள் பொமன் இரானி மற்றும் விக்ராந்த் மாஸ்ஸே ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட ஷாருக்கான், 26/11 மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவரைக் கவுரவித்தார். தனது மகனுடனான உரையாடலை நினைவு கூர்ந்த ஷாருக்கான், வெறுப்பை அன்பாக மாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும், பயத்தை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் பேசினார். அமைதி குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அவர், தனக்கு அமைதி என்பது என்னவென்ற தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அமைதி என்பது ஒருவர் எடுக்கும் முடிவு என்றும், அது ஒரு தனி மனிதனிடமிருந்தே தொடங்குகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற வேண்டிய ஒரு வாக்குறுதியாக அது பார்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மாறுபட்ட கோணங்களைப் புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது குறித்துப் பேசிய, ஷாருக்கான், நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒவ்வொருவரின் கதையையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மக்கள் பெரும்பாலும் தங்கள் கனவுகள், அடையாளங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகப் போராடுகிறார்கள். சில சமயங்களில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கருத்து வேறுபாடுகள் போன்ற அற்பமான விஷயங்களுக்காகக் கூட சண்டையிடுகிறார்கள். ஆனால் அமைதிக்கு ஒரு சண்டை தேவையில்லை என்று கூறினார்.

தனது உலகப் பயணங்களின்போது தனக்குக் கிடைக்கும் அன்பை நினைவு கூர்ந்த ஷாருக்கான், நமது நாடான இந்தியா அமைதி, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். மேலும், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் இடம்பெற்ற தனது பிரபலமான வசனத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், பெரிய நாடுகளில் இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் நடப்பது சகஜம்தான், சக்தி வாய்ந்த நாடுகள் எடுக்கும் பெரிய முடிவுகளுக்கு மத்தியில், மனிதநேயத்தின் சிறிய செயல்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அந்த செயல்கள்தான் வரலாற்றை மாற்றும் என்று கூறினார் ஷாருக்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !