உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா படத்திற்காக 10 முதல் 12 படங்களை தவறவிட்டேன் : ஏ.ஆர்.ரஹ்மான்

ராமாயணா படத்திற்காக 10 முதல் 12 படங்களை தவறவிட்டேன் : ஏ.ஆர்.ரஹ்மான்

ஹிந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ராமாயணா. கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் இதுவரை 1,654 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தில் ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் இசை ஆரம்பத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்தாலும், படம் வெளியான பிறகு ரசிகர்களால் பாடல்கள் பாராட்டப்பட்டன.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாவது நாளில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛எனது ஒட்டுமொத்த குழுவும் உற்சாகமாக உணரும் படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். ராமாயணா படத்தின் இசை மற்றும் தீம் இசைக்காக 3 ஆண்டுகளாக உழைத்தேன். ராவண தாண்டவம் போன்ற சில பாடல்களுக்கு 12 முதல் 13 வெர்ஷன்கள் வரை உருவாக்கப்பட்டன. இறுதியாக, அனைவருக்கும் பிடித்த ஒரு வடிவத்தைக் கண்டறிந்தோம். அந்த உருவாக்கச் செயல்முறை மிகவும் அழகானது. ராமாயணா படத்தின் மனநிலையிலேயே முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக 10 முதல் 12 படங்களை நான் கைவிட்டேன். அவை பல முக்கியமான இயக்குநர்களின் படங்கள், ஆனாலும் அவற்றை நான் விட்டுவிட்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

ஒரு இந்தியராக, கர்நாடக இசையாக இருந்தாலும் சரி, இந்துஸ்தானி இசையாக இருந்தாலும் சரி, இந்திய இசையே உங்களின் அடித்தளம். இவற்றில் ராகங்கள் மற்றும் உணர்ச்சிகளின் சூத்திரங்களும் பொக்கிஷங்களும் மறைந்துள்ளன. இதுவரை பயன்படுத்தப்படாத ராகங்களைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி, ஒரு இனிய மெட்டை உருவாக்குவது எப்படி என்று நான் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். இதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்ட ரஹ்மான், ரங்கீலா படத்தில் இடம்பெற்ற ஹாய் ராமா பாடலை நினைவு கூர்ந்தார். அது ஒரு காதல் உணர்வுமிக்க பாடலாக இருந்தபோதிலும், அதில் ஒரு, பூரியா தனாஸ்ரீ என்ற பக்தி ராகம் பயன்படுத்தப்பட்டிருந்தது. படங்களிலும் உணர்ச்சிகளிலும் ராகங்களைப் பயன்படுத்துவது எப்போதும் ஒரு சவால்தான். வெறும் மெட்டு அமைப்பது மட்டுமல்லாமல், இதுவரை யாரும் பயன்படுத்தாத வகையில் ஒரு ராகத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட, வரவிருக்கும் பனாரஸ் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர்கள் அபிஷேக் பானர்ஜி, நீரஜ் காபி, இயக்குநர் பரத் பாலா மற்றும் ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸ் ஆகியோருடன் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !