மணிப்பூர் பெண்ணாக நடிக்கும் பவானிஸ்ரீ
யாத்திசை படத்தை இயக்கிய தரணி ராசேந்திரனின் அடுத்த படம் ‛டெத் ரயில்வே'. இதில் விடுதலை படத்தில் நடித்த பவானிஸ்ரீ ஹீரோயின். படம் குறித்து அவர் பேசியது ''இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் பர்மா வழியாக இந்தியா மீது படையெடுத்து வந்தபோது அதில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காக தமிழர்கள் பலர் போரிட்டனர். நேதாஜியின் இந்திய ராணுவத்திலும் தமிழர்கள் பங்கு பெற்றனர். ஜப்பானியர்கள் தங்கள் தடவாளங்களை எளிதில் கொண்டு செல்ல பர்மா வழியாக ரயில்பாதை அமைத்தனர். அந்த பணியில் போர்க்கைதிகள், கூலிகள், அடிமைகள் என பலரும் பங்கு பெற்றனர். ஒன்றரை லட்சம்பேர் அந்த பணியில் இறந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னணியில் கற்பனை கலந்து உருவான படம் இது.
சென்னையில் அணியில் இருந்து போரிடுபவராக யாத்திசை சேயோன் நடிக்கிறார். அவரின் மணிப்பூர் காதலியாக நான் வருகிறேன். அந்த கேரக்டருக்காக நிறைய பயிற்சி எடுத்தேன். அந்த இன பெண்கள் எப்படி அமர்வார்கள், எப்படி பேசுவார்கள், எந்த மாதிரி உடை உடுத்தவார்கள் என கற்றுக் கொண்டேன். 1940களில் படம் நடப்பதால் ஆர்ட், காஸ்ட்யூம் விஷயத்தில் ரொம்பவே கவனம் செலுத்தினார்கள். நிஜ வடகிழக்கு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. எனவே, நாகர்கோவில் எஸ்டேட் பகுதிகளில் செட்போட்டு படப்பிடிப்பு நடத்தினோம். காடு, மலை என்ற கதை என்றால் என்னிடம் வருகிறது. விடுதலைக்குபின் இப்படிப்பட்ட கதையில் நடிப்பது மகிழ்ச்சி'' என்றார்.