கீர்த்தி சுரேசுக்கு நன்றி தெரிவித்த பிரிகிடா
லியோ சிவகுமார் நடிக்கும் டெலிவரி பாய் படத்தில் பிரிகிடா ஹீரோயின். கடந்த வாரம் வந்த சத்தியவான் சாவித்திரி படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தார். அவர் பேசுகையில், ‛‛ 'டெலிவரி பாய்' திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதில் வாய்ப்பளித்ததற்கு இயக்குனர் நானிக்கு நன்றி. நான் ஏற்கெனவே நடித்த 'பவி டீச்சர்' கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
படக்குழுவில் பலரும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால், இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக லியோ சிவக்குமார் எனக்கு ஏழு, எட்டு வருடங்களாகத் தெரியும். நானும் அவரும் பல்லாவரத்தில் ஒரே அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறோம். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தில் அவரது ஆக்ஷன் மற்றும் நடிப்பு மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற 'செங்காத்து' பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. படத்தில் ராதிகா மேடம் போன்ற அனுபவமிக்க நடிகையுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்த்து ஆதரிக்க வேண்டும். சமீபத்தில் வெளியான 'சத்தியவான் சாவித்திரி' படத்தில் எனது நடிப்பைப் பாராட்டி மேடையில் குறிப்பிட்ட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'டெலிவரி பாய்' திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது'' என்றார்.