சினிமா என்பது மனித உணர்வுகளையும் அனுபவங்களையும் ஆராய்வது : ஆயுஷ்மான் குரானா
சூரஜ் ஆர்.பர்ஜாத்யா இயக்கத்தில் உருவாகியுள்ள 'யே பிரேம் மோல் லியா' (Yeh Prem Mol Liya) படத்தில் நாயகனாகஆயுஷ்மான் குரானா, நடித்துள்ளார். காதல் கதையின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், 'பிரேம்' என்ற கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் ஷர்வரி வாக் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் நவம்பர் 27ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படம் குறித்தும் தனது கதாபாத்திரம், ஷர்வரியுடனான திரை இணைவு, இன்றைய காதலின் தன்மை குறித்தும் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி?
சூரஜ் சார் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது படங்கள் எப்போதும் உறவுகள், உணர்வுகள் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாகப் பேசியிருக்கும். அவருடைய இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். நடிகராக வெவ்வேறு கதைக்களங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு. அந்த வகையில், முற்றிலும் மாறுபட்ட சினிமா உலகத்துக்குள் நுழைய இந்தப் படம் வாய்ப்பளித்தது. பல தலைமுறை ரசிகர்களை ரசிக்க வைத்த ஒரு தனித்துவமான கதை சொல்லும் பாணியை அனுபவிக்கவும் முடிந்தது.
உங்களது பெரும்பாலான படங்கள் வித்தியாசமான கதைக்களங்களையும், சமூகக் கருத்துகளையும் கொண்டவை. இந்தப் படம் உங்களது தேர்வுகளில் ஏற்பட்ட மாற்றமாகக் கருதலாமா?
இதை மாற்றம் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வெவ்வேறு மனித உணர்வுகளையும் அனுபவங்களையும் ஆராய்வது. வித்தியாசமான கதைகளில் நடித்ததைப் போலவே காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியிலான படங்களிலும் நடிப்பதை விரும்புகிறேன். ஒரு நடிகர் குறிப்பிட்ட பிம்பத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. ஒரு கதை எனக்குப் பிடித்திருந்தால், அதில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். அந்த வகையில், வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க 'யே பிரேம் மோல் லியா' நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
முந்தைய ராஜ்ஸ்ரீ படங்களில் ரசிகர்கள் பார்த்த பிரேம் கதாபாத்திரங்களிலிருந்து உங்களது பிரேம் எவ்வாறு மாறுபடுகிறார்?
ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த பிரேமும் அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பிரதிபலிப்பார். என்னுடைய பிரேம் தனித்துவமான குணங்களையும், உறவுகளை அணுகும் தனக்கென ஒரு பார்வையையும் கொண்டவர். இந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான பல்வேறு பரிமாணங்களைக் கண்டறிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்றாலும், சில விஷயங்களைக் கேள்வி கேட்கவும் தயங்காதவர். அதுதான் அவரை சுவாரசியமானவராகவும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியவராகவும் மாற்றுகிறது.
ஷர்வரி வாக் உடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ஷர்வரி சிறந்த நடிகை. அவருக்கு அற்புதமான திரை ஆளுமை இருக்கிறது. படத்துக்குப் புதுமையையும், உற்சாகத்தையும், இயல்பான நடிப்பையும் அவர் கொண்டு வந்துள்ளார். காதலில் விழும் கதாபாத்திரங்களில் நடிக்கும்போது இருவருக்கும் இடையிலான புரிதலும் இணக்கமும் மிகவும் அவசியம். அந்த வகையில் எங்களுக்குள் நல்ல நட்பு மற்றும் புரிதல் இருந்தது. அர்ப்பணிப்புடன் நடிக்கக் கூடியவர் என்பதுடன், ஒவ்வொரு காட்சிக்கும் நன்றாகத் தயாராகி வருவார். எங்களது ஜோடியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
இன்றைய வாழ்க்கையில் காதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை காதல் என்பது பரஸ்பர மரியாதை, புரிதல், பொறுமை மற்றும் நிலையான அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. காதலில் விழுவது மாயாஜாலம் போன்ற ஓர் அழகான அனுபவம். ஆனால், ஓர் உறவைத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டு செல்வதற்கு இருவரின் முயற்சியும் அவசியம். ஒருவர் முழுமையானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது காதல் அல்ல. ஒருவருக்கொருவர் இருக்கும் குறைகளையும் ஏற்றுக்கொண்டு, இணைந்து வளர்வதுதான் உண்மையான காதல். வெற்றிகரமான உறவுக்கு நட்பும் மிக முக்கியமான அடித்தளமாக இருக்கும்.
இவ்வாறு ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.