தி டார்க் ஹெவன்' கூட்டணியின் அடுத்த படம் 'தி லாஸ்ட் கேஸ்'
பிக்பாஸ் புகழ் முகங்களான சித்து, தர்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாக வெற்றி பெற்ற படம் தி டார்க் ஹெவன். நேற்று ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த டீம் அடுத்து தி லாஸ்ட் கேஸ்' என்கிற படத்தைத் தொடங்கியுள்ளது. 'ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும். அது குற்றவியல் சம்பந்தமான ஒரு கோட்பாட்டைத் திருத்தி எழுதும்' என்கிற இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் உருவாகிறது.
படம் குறித்து இயக்குனர் பாலாஜி பேசுகையில், ‛‛இதுவும் ஒரு மலைப்பகுதியில் நடைபெறும் குற்றம் புலனாய்வு சார்ந்த கதையாக இருந்தாலும் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதில் பின்புலமாக வருகிற நிலவியல் காட்சிகள் படத்தை வேறு மாதிரியாக வேறுபடுத்திக் காட்டும்'' என்றார்.
ஹீரோ சித்து பேசுகையில், நான் தொலைக்காட்சித் தொடர்களில் திரைப்படங்களில் தோன்றினாலும் எனது வெற்றிப் பயணத்தில் பிள்ளையார் சுழி போட்டது 'தி டார்க் ஹெவன் ' படம்தான். சகோதரர் இயக்குனர் பாலாஜி அந்தப் படத்தின் மூலம் எனது வெற்றிக்கான தொடக்கப் புள்ளியை அமைத்து வெற்றிப் படியேற வழி செய்து கொடுத்தார். அதன் அடுத்தபடியாகத்தான் இந்தப் பட வாய்ப்பையும் அளித்துள்ளார் என்று கூற வேண்டும். அந்தப்படம் எனக்கு ஒரு பெரிய அடையாளமாக இருந்தது. நான் அதற்கு முன்பு எங்கே சென்றாலும் எனது தொலைக்காட்சி பங்களிப்பைப் பற்றித் தான் பேசுவார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் அதில் நான் நடித்த பாரி என்கிற கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தினார்கள். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. முதல் படம் வெற்றி அடைந்தாலும் இந்த படத்துக்காக சம்பளத்தை மாற்றவில்லை. குறைவான சம்பளத்தில் தான் நடிக்கிறேன்'' என்றார்.