ரூ.634 கோடி மோசடி வழக்கில் தொடர்பா?: அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து மறுக்கும் ஷபானா ஷாஜகான்
கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தார். அந்த துறையில், டெண்டர் ஒதுக்கீடு, பணி நியமனம், பணியிட மாறுதலில் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரு மற்றும் அவரது தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் உட்பட, 25 இடங்களில் சோதனை நடத்தி, 170 ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இந்த வழக்கில் டிவி நடிகைகள் ஜனனி அசோக்குமார் மற்றும் ஷபானா ஷாஜகான் ஆகிய இருவரது பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களுக்கு பணம் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஜனனி அசோக்குமார், ஆதாரமில்லாமல் பேசக்கூடாது எனக்கூறி தன் தரப்பு விளக்கத்துடன், ரூ.634 கோடி வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது, ஷபானா ஷாஜகானும், இந்த வழக்கு பற்றிய செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஷபானா ஷாஜகான் வெளியிட்ட அறிக்கை: கடந்த இரண்டு நாட்களாக, ஒரு முக்கிய அரசியல்வாதி தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.634 கோடி விவகாரத்துடன் இணைத்து யுடியூப், எக்ஸ் (டுவிட்டர்), பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் எனது பெயரும் புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தக் கூற்றுகள் மிகவும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதலாக மாறி வருகின்றன; மக்கள் என்னிடம் இதற்கான விளக்கம் கேட்டு வருகின்றனர்.
என்னிடம் விளக்கம் கேட்கப்படுவதற்கு முன்பு, நான் கேட்க விரும்பும் சில கேள்விகள் இதோ:
பேசப்பட்டு வரும் ஆவணத்தில் எனது பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது?
இந்த விவகாரத்துடன் என்னை இணைக்கும் சரிபார்க்கப்பட்ட ஆதாரம் என்ன?
முதலில் எனது பெயரை இதில் இணைத்தது யார், எந்த அடிப்படையில்?
பல சமூக வலைதளப் பக்கங்கள் ஒரே மாதிரியான குறிப்புகளுடன் (captions) இதே குற்றச்சாட்டுகளை ஏன் திரும்பத் திரும்பப் பகிர்கின்றன?
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்களிடம் அவற்றின் மூலம் (source) என்னவென்று கேட்கப்படாத நிலையில், நான் மட்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கப்படுகிறது?
என்னை இழிவுபடுத்துவதாலும், ஒழுக்கக்கேடானவள் என அவதூறு பேசுவதாலும் (slut-shaming) என்ன நிரூபிக்கப்படுகிறது?
என்னைக்குறித்து வெளியிடப்படும் பாலியல் ரீதியான மற்றும் அவதூறான 'மீம்ஸ்கள்' (memes) மற்றும் பதிவுகள் தரக்குறைவானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு தனிநபர் மீதான கடுமையான தாக்குதல் இது.
இந்தப் பொய்களை அவசர அவசரமாக வெளியிட்டு, பகிர்ந்து, இதன்மூலம் பணம் ஈட்டத் துடித்தவர்களுக்கு:
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என உங்களுக்குத் தெரியவந்தால், அவற்றை எவ்வளவு பகிரங்கமாகப் பகிர்ந்தீர்களோ, அதே அளவு வெளிப்படையாகத் திருத்திக் கொள்வீர்களா? எனது பெயரைக் களங்கத்திலிருந்து மீட்டெடுக்க இதே அளவு முயற்சி செய்வீர்களா? அல்லது அடுத்த விவகாரத்தை நோக்கி சாதாரணமாகக் கடந்து சென்று விடுவீர்களா?
ஒவ்வொரு மணிநேரமும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் வலுத்துக்கொண்டே செல்கின்றன. என் மீது அக்கறை கொண்டு என்னைத் தொடர்புகொண்ட அனைவருக்கும் இந்த விளக்கத்தைப் பகிர்கிறேன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை!
எனது சுயமரியாதையை யாரிடமும் யாசித்து நிற்பதற்காக நான் இங்கு வரவில்லை. அதைத் தருவதற்கோ அல்லது பறித்துக்கொள்வதற்கோ உங்களுக்கு எந்த உரிமையும் இருந்ததில்லை.
நான் யார் என்பது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நன்றாகத் தெரியும்; அது மட்டுமே முக்கியமான உண்மை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.