பிரசவத்திற்கு பிறகான பெண்களின் உடலமைப்பை விமர்சிப்பது ஏன் ? : கத்ரீனா கைப் காட்டம்
பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடல் அமைப்பு குறித்து வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிராகப் பேசியுள்ள பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், தாயாக உருவெடுத்த பெண்கள் ஏன் கர்ப்ப காலத்திற்கு முந்தைய தங்கள் உடல் வடிவத்திற்குத் திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்தின் போது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி மக்கள் நன்கு அறிந்திருந்தும், சிலர் இன்னும் அந்த மாற்றங்களுக்காகப் பெண்களைக் குறை கூறித்தான் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது குறித்த போதிய தகவல்களும் விழிப்புணர்வும் நிறைந்துள்ள நிலையில், பிரசவத்திற்குப் பிறகான பெண்களின் உடலமைப்பைக் விமர்சிப்பதை விழிப்புணர்வின்மை என்று சாக்குப்போக்கு சொல்லி தப்ப முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் என் வாழ்க்கையின் இந்த அழகான தருணத்திலும், செல்லவிருக்கும் பாதையிலும் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். தாயான பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்திற்கு முந்தைய உடலமைப்பை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிற்கும் கண்டனம் தெரிவித்தார். தாய்மை என்பது கடந்து செல்ல வேண்டிய ஒரு கட்டம் அல்ல, மாறாக அது ஒரு புதிய தொடக்கம். எதற்காக நான் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.