'டாக்சிக்' அடுத்து ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆகிறதா 'பௌசி'?
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வெளியான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் சில பல நாடுகளில் குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றது. அதன்பின் சில தென்னிந்தியப் படங்கள் வெளிநாடுகளிலும் வசூலைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கெல்லாம் அதிகமாகவே விளம்பரப்படுத்தப்பட்டன.
யஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'டாக்சிக்' படத்தை கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படப்பிடிப்பு நடத்தி மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஆனால், படம் எதிர்பாராத படுதோல்வியை அடைந்தது. ஆங்கில வெளியீடு என்பது எந்தவித கவனத்தையும் ஈர்க்காமல் போனது.
இந்நிலையில் பிரபாஸ் நடித்து தற்போது உருவாகி வரும் 'பௌசி' படத்தை அடுத்து ஆங்கிலத்திலும் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. நேற்று பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்திற்காக 'பைல் நம்பர் 25 - பௌசி' என்ற வீடியோ வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
நேற்று வெளியான வீடியோ சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பாக, இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் நடப்பதாகவும், அதில் ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ் இருவரும் 'பௌசி' பற்றி பேசுவதாக காட்சி இடம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் இக்கதை நடப்பதால் ஆங்கிலத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.