40 ஆண்டுகளில் முதல்முறை : ஐமேக்ஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் 'ஜெயிலர் 2' பார்த்த ரஜினிகாந்த்
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர் 2' படம் இரண்டாவது வாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் 549 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது இப்படத்தின் வசூல் 600 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை பிரம்மாண்டத் திரைகளான ஐமேக்ஸ், பிக்ஸ்எஸ், எபிக் ஆகிய திரைவடிவம் உள்ள தியேட்டர்களில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அந்தத் தியேட்டர்களில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
தனது வீட்டில் உள்ள தியேட்டரிலேயே படம் பார்க்கும் வசதியை வைத்திருக்கும் ரஜினிகாந்த், 'ஜெயிலர் 2' படத்தை ஐமேக்ஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் பீனிக்ஸ் மாலில் உள்ள பிவிஆர் ஐமேக்ஸ் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு 'ஜெயிலர் 2' படத்திற்காக சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அத்தியேட்டரில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். தியேட்டர் நிர்வாகத்தினர் அவரை பூங்கொத்து கொடுத்த வரவேற்ற வீடியோ, ரசிகர்கள் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் இப்போது தான் ரஜினி ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை படக்குழுவினரே தெரிவித்துள்ளனர்.