உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திக்கற்ற பார்வதி முதல் மகளிர் மட்டும் வரை.... : சிங்கீதம் சீனிவாச ராவ்வின் டாப் 10 படங்கள்

திக்கற்ற பார்வதி முதல் மகளிர் மட்டும் வரை.... : சிங்கீதம் சீனிவாச ராவ்வின் டாப் 10 படங்கள்

ஒரு நல்ல இயக்குனருக்கு அழகு கதை, திரைக்கதைகளை முடிவு செய்ய தேவையான அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக படங்களை இயக்குவது. அப்படி அவகாசம் எடுத்து இயக்குபவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு படம் இயக்குகிறார்கள். அவசரகதியில் சிலர் ஒரு வருடத்திலேயே முன்று படங்கள் இயக்குவதும் உண்டு. முன்னவர்கள் தரமான படங்களோடு, அவர்களது காலம் கடந்தும் ஜொலித்துக் கொண்டிருக்க, பின்னவர்கள் மசாலா மணம் தீர்ந்தவுடன் மக்களால் மறக்கப்படுகிறார்கள்.

இந்த பார்முலாவுக்குள் கொண்டு வர முடியாத அபூர்வ இயக்குனர் ஒருவர் இருந்தார் என்றால் அது நிச்சயம் மறைந்த சிங்கீதம் சீனிவாச ராவ் தான். '72 ல் தனது முதல் படத்தை இயக்கத் தொடங்கியவர், கடைசி படத்துக்கு எடுத்துக் கொண்ட ஓய்வைத் தவிர்த்துப் பார்த்தால், 42 ஆண்டுகளில் 64 படங்களை இயக்கியிருக்கிறார். இப்படங்களை பல்வேறு மொழிகளில் இயக்கினார் என்பதோடு புராணம் தொடங்கி சயின்ஸ் பிக்ஷன் வரை அவர் தொடாத ஜானர்களே இல்லை என்பது இன்னொரு சாதனை. அவரது இயக்கத்தில் வந்த டாப் 10 படங்கள்...

1. திக்கற்ற பார்வதி
வெளியான ஆண்டு 1974. இதே தலைப்பில் வெளியான ராஜாஜியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். லட்சுமி, ஸ்ரீகாந்த் நாயகன் நாயகியாக நடிக்க, 'குடியால் குடி கெடும்' என்ற கருத்தை அன்றே பகீர் முடிவுகளுடன் சொன்ன படம். இசை பிரபல வீணை இசைக் கலைஞர் சிட்டி பாபு. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற படம். நடிகை லட்சுமியின் புகழை ஓஹோவென்று உயர்த்திய படம்.

2. ராஜபார்வை
வெளியான ஆண்டு 1981. கமலின் 100வது படம். ஹாலிவுட் படங்களான 'பட்டர்பிளைஸ் ஆர் ப்ரீ', 'தி கிராஜுவேட்' ஆகிய படங்களை கொஞ்சம் தழுவி தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தாலும் தொழில்நுட்பரீதியாக மிக நேர்த்தியான படம். கமலும் மாதவியும் நடிப்பில் மிரட்ட, இளையராஜாவின் சங்கீதமும் சேர்ந்து சிங்கீதத்தை அகில இந்திய புகழ்பெற்ற இயக்குனராக்கிய படம். ஆனால் வசூல் ரீதியாக தோல்விப்படம்.

3. தேவதா
வெளியான ஆண்டு 1982. மொழி : தெலுங்கு. நடிப்பு: சோபன் பாபு, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா. தெலுங்கில் குடும்ப உறவுகளையும் முக்கோணக் காதலையும் மையமாகக் கொண்டு வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம். டைட்டில் கவிதை மயமாக இருந்தாலும் கொஞ்சம் மசாலா தூக்கலான படம்

4. மயூரி
வெளியான ஆண்டு 1984. விபத்தில் காலை இழந்த பின்னரும் செயற்கைக் காலுடன் நடனத் துறையில் சாதனை படைத்த சுதா சந்திரனின் நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் படம். இதில் சுதா சந்திரனே கதாநாயகியாக நடித்தார். இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் வெற்றிக்கொடி 'நாட்டிய' படம்.

5. பாக்யடா லக்ஷ்மி பாரம்மா
வெளியான ஆண்டு 1986. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்பத் தயாரிப்பில் அவரே நாயகனாக நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம். பெயரில் மட்டுமின்றி இயற்கையாகவே வளமான சங்கீத ஞானம் பெற்றிருந்த சீங்கீதம், இப்படத்துக்கு தானே இசையமைக்க, படத்துக்கான சில இசைக்கோர்வைகளை இசைஞானி இளையராஜா கன்டக்ட் செய்த பெருமைக்குரிய படம் இது.

6. புஷ்பக விமானம்
வெளியான ஆண்டு 1987. டப்பிங் பணிகளுக்காக அம்மஞ்சல்லி தேவைப்படாத பான் இந்தியா படம். 'என்னது படத்துல வசனமே இல்லையா?' என்று வினியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கி ரிலீஸில் ஹிட் அடித்த படம். கமல், அமலா காம்போ. எல்.வைத்யநாதனின் இசையுடன் சுமார் 30 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 1 கோடிக்கும் மேல் வசூல் அடித்த படம்.

7. அபூர்வ சகோதரர்கள்
வெளியான ஆண்டு 1989. கமல், சிங்கீதம், ராஜா கூட்டணியின் கமர்ஷியல் காவியப்படம். இதில் கமல் ஏற்ற குள்ள அப்பு பாத்திரம் அவரை இந்திய சினிமாவின் உயர்ந்த நடிகனாக்கியது. கொண்டாட்டத்துக்கு 'ராஜா கைய வச்சா'… காதல் தோல்விக்கு 'உன்னை நெனச்சேன் பாடுப் படிச்சேன்' என்று அன்று முதல் இன்று வரை இந்த இரு பாடல்கள்தான் தேசிய கீதங்கள்.

8. மைக்கேல் மதன காமராஜன்
வெளியான ஆண்டு 1990. கதை கேளு…கதை கேளு என்று மொத்தப்படத்தின் கதையையும் டைட்டில் பாடலில் சொல்லிவிட்டு ஒரு படத்தைத் துவங்க எவ்வளவு தைரியம் வேண்டும்? ஆனால் கமலும் சிங்கீதமும் அதைத்தான் இப்படத்தில் செய்தார்கள். தமிழின் கல்ட் கிளாஸிக் காமெடிப் படங்களில் இப்படம் எப்போதும் முதல் இடத்தில் நிற்கும்.

09. பைரவ தீபம்
வெளியான ஆண்டு 1994. மொழி: தெலுங்கு. இன்றைக்கு சோஷியல் மீடியாவின் காமெடி கன்டென்டாக மாறியிருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணாவை வைத்து நாட்டுப்புறக் கதை மற்றும் கற்பனை உலகத்தை (Fantasy) மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரம்மாண்ட காவியத் திரைப்படம். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி ரோஜா. ஆந்திராவில் பெருமைக்குரிய 10 நந்தி விருதுகளை வென்ற படம்.

இந்த படத்துடன் ஆதித்யா 369 படத்தையும் சேர்க்கலாம். வெளியான ஆண்டு 1991. மொழி: தெலுங்கு, நடிப்பு: நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகினி தென்னிந்திய சினிமாவின் முதல் 'டைம் டிராவல்' (Time Travel) சயின்ஸ் பிக்சன் திரைப்படம். கால இயந்திரத்தில் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்லும் கதையை, கொஞ்சமும் குழப்பாமல், மிக நேர்த்தியாக இயக்கியிருந்தார் சிங்கீதம்.

10. மகளிர் மட்டும்
வெளியான ஆண்டு 1994. ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் கமல் கவுரவ வேடத்தில் நடித்த படம். இன்றைக்கு பெண்களுக்கு குரல் கொடுக்கும் படங்கள் அடிக்கடி வருகின்றன என்றாலும் '94லிலேயே அவர்களுக்கு அலெர்ட் கொடுத்து அதற்கு 'மகளிர் மட்டும்' என்று டைட்டிலும் வைத்து, துணிச்சல் காட்டியவர் சிங்கீதம். ரேவதி, நாசர், ஊர்வசி, ரோகினி என்று அனைவருமே நடிப்பில் கலக்கியிருந்தார்கள் என்றாலும் பிணமாக நடித்த நாகேஷ் அந்த பாத்திரத்துக்கே உயிர் கொடுத்திருந்தார்.

மேலே குறிப்பிட்ட படங்கள் தவிர்த்து சிங்கீதம் சினிவாச ராவ் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்ததை கீழே கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !