உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மேற்கத்திய பாணியில் வெளிவந்த இந்தியாவின் முதல் 'கவ்பாய்' திரைப்படம்

பிளாஷ்பேக்: மேற்கத்திய பாணியில் வெளிவந்த இந்தியாவின் முதல் 'கவ்பாய்' திரைப்படம்

ஹாலிவுட் சினிமா முதல் இந்திய சினிமா வரை, சினிமாவிற்கான பொதுவான கதைக் களங்கள் என்றால் அவை, ராஜா ராணி கதைகள், புராண இதிகாசக் கதைகள், சமூகக் கதைகள், வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவான புனைவுக் கதைகள், அறிவியலோடு தொடர்புடைய புனைவுக் கதைகள், மாயாஜால புனைவுக் கதைகள் என நாம் பட்டியலிட்டு சொல்ல முடியும். தொடர்ந்து இதுமாதிரியான திரைப்படங்களையே பார்த்துப் பழக்கப்பட்டிருந்த நமக்கு இந்த திரையுலகம் அறிமுகப்படுத்திய மற்றுமொரு கதைக்களம்தான் “கவ்பாய்” வகைத் திரைப்படங்கள். இந்தக் 'கவ்பாய்' வகைத் திரைப்படங்கள் ஒரு காலத்தில் உலக சினிமாவில் ஒரு தனித்துவமிக்க இடத்தைப் பிடித்திருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அமெரிக்காவின் மேற்குப் பகுதி பின்னணியைக் கொண்டு அமைந்த இந்த சாகஸத் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள், கதைக்களம், ஆடை அணிமணிகள், உடல்மொழி, இசை, என ஒவ்வொன்றும் மற்ற சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும். பாறைகளும் மலைகளும் நிறைந்த பகுதி, வறண்ட பாலை நிலங்கள், மரத்தினாலான குதிரை லாயங்கள், மதுபானக் கூடங்கள் ஆகியவை இவ்வகைத் திரைப்படங்களுக்கான முக்கிய குறியீடுகளாக நாம் பார்க்கலாம்.

படத்தின் நாயகன், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களும் தலையில் தொப்பியுடன் தோலினால் செய்யப்பட்ட ஆடைகள் அணிந்து, இடுப்பில் இரண்டு துப்பாக்கிகள் கொண்ட பெல்ட்டோடு குதிரைகளில் சவாரி செய்து வருவர். துப்பாக்கி சுடுவதிலும், குதிரைப் பந்தயத்திலும் வல்லவர்களாக வரும் நாயகர்கள், கொள்ளையர்களிடம் இருந்து அப்பாவி மக்களையும், கிராமங்களையும் மீட்டெடுக்கும் மீட்பர்களாக படத்தில் அடையாளப்படுத்தப்படுவர்.

ஹாலிவுட்டில் மட்டுமே படமாக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருந்த இதுமாதிரியான திரைப்படங்களை, தென்னிந்திய திரையுலகமும் எடுக்க முன்வந்தது. அந்த வகையில் இந்தியாவிலேயே எடுக்கப்பட்ட முதல் 'கவ்பாய்' திரைப்படம் என்ற அடையாளத்தோடு வெளிவந்த திரைப்படம்தான் “மோசகல்லாக்கு மோசகாடு” என்ற தெலுங்கு மொழித் திரைப்படம். 1971ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் நாயகன் அன்றைய தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான கிருஷ்ணா.

“பார் எ ப்யூ டாலர்ஸ் மோர்”, “தி குட் தி பேட் அன்ட் தி அக்லி”, “மெக்கன்னஸ் கோல்டு” போன்ற ஹாலிவுட் திரைப்படங்களின் சாயலில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை தனது “பத்மாலயா ஸ்டூடியோஸ்” மூலமாக தயாரித்தும் இருந்தார் நடிகர் கிருஷ்ணா. இந்தத் திரைப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு “மோசக்காரனுக்கு மோசக்காரன்” என்ற பெயரில் வெளிவந்து, அன்றைய நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இத்திரைப்படத்தின் வருகைக்குப் பின்புதான் தமிழிலும் இது மாதிரியான திரைப்படங்கள் வரத் துவங்கின.

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான எம் கர்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த “காலம் வெல்லும்”, “கங்கா” போன்ற திரைப்படங்கள் எல்லாம் இம்மாதிரியான 'கவ்பாய்' வகைத் திரைப்படங்களே. 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று வெளிவந்த “மோசகல்லுக்கு மோசக்காடு” என்ற இந்தத் தெலுங்குத் திரைப்படம், ஆந்திராவில் பல திரையரங்குகளில் அன்று 100 நாட்கள் ஓடி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த திரைப்படமாக அமைந்திருந்தது நடிகர் கிருஷ்ணாவிற்கு. 2022ம் ஆண்டு இப்படத்தின் நாயகனான நடிகர் கிருஷ்ணாவின் மறைவிற்குப் பின், 2023ம் ஆண்டு அவரது பிறந்த தினமான மே மாதம் 31 அன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, புதுப் பொலிவுடன் மீண்டும் இத்திரைப்படம் அவரது நினைவைப் போற்றும் வகையில் திரையிடப்பட்டு, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !