சினிமாவில் ஓடிக்கொண்டிருப்பதே பெரும் பரிசு: ஹென்சா 'பளீச்'
இருக்கின்ற இடத்தின் சிறப்பை உணர்ந்தால், நாம் எட்ட நினைக்கும் இடத்திற்கான வழியை தானே இவ்வுலகம் வகுத்துக் கொடுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் நடிகை ஹென்சா. சினிமா, சீரியல் என இரண்டு பக்கமும் சரிசமமான பாய்ச்சல் காட்டும் இவர், சீரியல் நடிகை,சப்போர்ட்டிங் ஆக்டர், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என பன்முகங்களை கொண்டிருக்கிறார்.
இவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
நான் 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இந்த பயணம் எனக்கு கனவு போல இருக்கிறது. சென்னை திருவொற்றியூர் எனது ஊர். ஆரம்ப காலத்தில் ரெக்கார்டிங் கம்பெனியில் வேலை செய்ததால், சினிமா சம்பந்தப்பட்ட தொடர்புகள் எனக்கு அதிகம். அந்த வகையில் தான் சினிமாவுக்குள் நான் இழுக்கப்பட்டேன்.
ஆரம்பத்தில் சினிமா மீது மோகமோ, ஈடுபாடோ கிடையாது. வேலை, வீடு, திருமணம் என சாதாரண வாழ்க்கையை எதிர்நோக்கி இருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறை ரெக்கார்டிக் கம்பெனிக்கு வருபவர்கள் சினிமா வாய்ப்பு பற்றி என்னுள் விதைக்க, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற சின்ன ஆர்வமே எனக்கு துாண்டுகோலாய் அமைந்தது.
முதலில் தேடி வந்த வாய்ப்பே பெரிய திரையில் 2வது ஹூரோயினாக நடிப்பதற்கு கிடைத்தது. 'கபடம்' படத்தில் 2வது ஹீரோயினாக நடித்தேன். பெயர் சொல்லும் அளவிற்கு வரவேற்பும் கிடைத்தது. பிறகு சின்ன, சின்னதாக நிறைய படங்கள், சீரியல்கள் நடித்தேன். திருமணத்திற்கு பின்புதான் என் திரைப்பயணத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
ரஜினி முருகன், மாப்பிள்ளை சிங்கம், சகலகலா வல்லவன், கணிதன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்தேன்.
சமீபத்தில் திரைக்கு வந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் எனக்கு மிகப்பெரிய 'ப்ரொபைலை' உருவாக்கி தந்திருக்கிறது. இதுதவிர 'ஆவின்' விளம்பரங்களிலும் மாடலாக நடித்திருக்கிறேன். 30க்கும் மேற்பட்ட படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக, தோழியாக, சப்போர்ட் டிங் ஆக்டராக நடித்திருக்கிறேன். கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றபோது சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா, கயல், இதயம் 2, சுட்டும் விழிச்சுடரே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறேன். நடிகர் சூர்யா, நடிகைகள் ராதிகா, மமிதா பைஜூடன் படம் முழுக்க நடிக்க கிடைத்த வாய்ப்பை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.
'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' படத்திற்கு பின்பு 2 புதிய படங்களில் வாய்ப்பு கிடைத்து பணியாற்றி வருகிறேன். அடுத்தடுத்து சிறந்த படங்களில் நடிப்பேன்.நிச்சயம் இந்த சினிமா உலகம் எனக்காக விட்டு வைத்திருக்கும் இடத்தை எவ்வளவு அழகாக, ஆழமாக உருவாக்க முடியுமோ அதற்காக உழைப்பேன்.
சினிமாவில் இவ்வளவு ஆண்டு நீடித்து உழைப்பதற்கு என் குடும்பத்தின் ஒத்துழைப்பு முக்கியமானது. எனது ஒவ்வொரு முயற்சிகளிலும் பாராட்டி, தேற்றி ஊக்கமளிப்பது அவர்கள்தான். நடிப்பிற்காக வரும் முதல் கமெண்டும், பாராட்டும் நட்பு வட்டாரத்தில் இருந்துதான் கிடைக்கும். குறிப்பிட்டு கணவர் பாராட்டுவதை அதிகம் எதிர்பார்ப்பேன்.
நடிப்பு தவிர ஆடை, அணிகலன்கள் மீது ஆவல் உண்டு. விதவிதமான ஆடைகள் அணிவது பிடிக்கும். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் புதியஆடைகளுக்கு டிசைன் செய்வது எனது பொழுதுப்போக்கு. யாரிடமும் அதிகம் பேசாத அமைதி சுபாவம் கொண்டவள். எனவே ஆக்டிவிட்டிக்காக என்னை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புவேன். என்னை பற்றிய எதிர்மறை விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை. அவற்றை அதன் இயல்பிலேயே கடந்து போக விட்டுவிடுவதே சிறந்தது.
நடிப்புக்காக இதுவரை விருதுகள், அவார்டுகள் பெற்றதில்லை என்றாலும், சினிமாவில் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதை பெரும் பரிசாக கருதுகிறேன். தொடர்ச்சியான வாய்ப்பும், போலிகளற்ற நட்புமே சினிமா எனக்கு தந்த அவார்டுகள். அடையாளங்கள், விருதுகள்பெறுவதற்கு அதற்கான உழைப்பை இன்னும் அதிகம் கொடுக்க வேண்டும். இதில் பொறுமை மிகவும் முக்கியம். முதலில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அதன் மதிப்பை உணர வேண்டும் என நினைக்கிறேன். இதை எப்போதும் மறக்க மாட்டேன்.