உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த்துக்கு பாராட்டுவிழா இல்லை: நடிகர் சங்கம் சொன்ன புது காரணம்

ரஜினிகாந்த்துக்கு பாராட்டுவிழா இல்லை: நடிகர் சங்கம் சொன்ன புது காரணம்


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ளவில்லை. பழம்பெரும் நடிகைகள் வந்தார்கள். ஆனால், இளம் ஹீரோயின்கள், காமெடியன்கள் என யாரும் வரவில்லை. 2800 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 700 பேர் மட்டும் கலந்துகொண்டனர். 'புருஷன்' படத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஓய்வில் இருப்பதால் நடிகர் சங்க செயலாளர் விஷாலும் இந்தமுறை வரவில்லை. பொதுக்குழுவுக்குபின் நிர்வாகிகள் அளித்த பேட்டி:

'தென்னிந்திய நடிகர் சங்க புதுக்கட்டட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் பாக்கி, பின்னர், ஒரு மாதம் வரை பணிகளை செக் செய்வார்கள். டிசம்பர் மாதத்திற்குள் புதுகட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்க வாய்ப்பு என்றார்கள். மேலும், இந்தமுறை சங்க கட்டடம் திறக்காததால் விஷால் தலை தீபாவளி கொண்டாட முடியாது. ஆனால், தலைப்பொங்கல் கொண்டாடுவார். அதற்குள் சங்க கட்டடம் திறக்கப்பட்டு விடும்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் பலர் கலந்துகொள்ள முடியவில்லை. படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்கள். அதேசமயம் சங்க கலைநிகழ்ச்சி என்றால் அனைத்து முன்னணி நடிகர்களும் வருகிறார்கள். அப்படி அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால்தான் கலைநிகழ்ச்சி நடத்தினோம். கடன்களை அடைத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்தப்படுமா என்று நிருபர்கள் கேட்க, எங்களுக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால், அவர் பாராட்டு விழாவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றார்கள். நடிகர் சங்க புதுக்கட்டடத்துக்கு ஆன மொத்த செலவை விரைவில் சொல்வோம் என நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறினார். மேலும், நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து யூடியூப்பில் தவறாக பேசிய 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிலர் முன்ஜாமின் பெற்று இருக்கிறார்கள். இது தொடரும். பாதிக்கப்பட்ட நடிகர்சங்க உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும். சிலசமயம் சங்க உறுப்பினர்களே இப்படி சக உறுப்பினர்களை பற்றி அவதூறாக பேசுவது தவறு' என்றார்கள்.

நடிகர் சங்க புது கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவரிடம் பேசியுள்ளோம். நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றப்படாது. அதேபோல் சங்கத்தில் உள்ள பெரிய அரங்கிற்கு சங்கரதாஸ்சுவாமிகள் பெயரே தொடர்ந்து இருக்கும். சங்க பணிகளுக்காக பாடுபட்ட விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு வேறுவகையில் உரிய கவுரவம் செய்யப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் போக்குவரத்து துறை அமைச்சர் கலந்துகொண்டார். அவர் சற்று நேரம் பொதுக்குழுவில் இருந்துவிட்டு புறப்பட்டார்.

பழம்பெரும் நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தன்னை அசோகன்தான் நடிகர் சங்க உறுப்பினர் ஆக்கினார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் சங்க நிகழ்ச்சியில் நான் நடனம் ஆடியிருக்கிறேன் என்று லதா நினைவு கூர்ந்தார். நடிகை குஷ்புவும் சங்க பொதுக்குழுவில் கலந்துகொண்டார். நாம் அனைவரும் ஒரே குடும்பம், நடிகைகள் பாதிக்கப்பட்டால் சங்கத்தில் புகார் அளிக்கலாம். பெண்கள் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்கலாம் என சங்க கூட்டத்தில் அவர் பேசினார். சென்னையில் இருந்து பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் சங்க கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !