பிளாஷ்பேக்: அண்ணன், தங்கையாக நடித்த கணவன் - மனைவி
அந்தக் காலத்தில் தொடர்ந்து இணைந்து நடித்த பல நட்சத்திரங்கள், காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு பிறகு அண்ணன் - தங்கையாக நடித்தில்லை திருமணத்திற்குப் பிறகு அண்ணன் - தங்கையாக நடித்த ஒரே நட்சத்திரத் தம்பதி எஸ்.எஸ்.ஆர் -- விஜயகுமாரி ஆகியோர் மட்டுமே.
இருவரும் 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக வலம் வந்தார்கள். 20க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தார்கள். காதலித்தார்கள், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருந்த நிலையிலும் விஜயகுமாரி அவரை திருமணம் செய்து கொண்டார்
திருமணத்திற்கு பிறகு 1963ல் வெளியான 'கைதியின் காதலி' என்ற படத்தில் அண்ணன்-தங்கையாக நடித்தனர். ஏ.கே. வேலன் இயக்கிய இப்படத்தை, அவரே தனது 'அருணாசலம் ஸ்டுடியோஸ்' பேனரின் கீழ் தயாரித்தார். மேலும் கதை மற்றும் வசனங்களையும் அவரே எழுதினார். ஒளிப்பதிவை வி. ராமமூர்த்தியும், இசையை கே.வி.மகாதேவனும் கவனித்துக் கொண்டனர்.
ராஜேந்திரன் ஜோடியாக எல்.விஜயலட்சுமி என்பவர் நடித்தார். இவர்களுடன் அசோகன், ஓஏகே.தேவர், ஆகியோரும் நடித்தனர். ஏழையான ராஜேந்திரன் தனது வாழ்க்கைக்காக கொள்ளை அடிக்கிறார். இதனால் சிறையில் அடைக்கப்படுகிறார். பல வருடங்களுக்கு பிறகு அவர் விடுதலையாகி தனது குடும்பத்தை தேடுகிறார். இந்த தேடலில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். கடைசியில் அந்த பெண் தனது சகோதரி என்பதை அறியும்போது என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
ராஜேந்திரனும், விஜயகுமாரியும் அண்ணன் - தங்கையாக நடித்தது அப்போது விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வி அடைந்தது. அதன்பிறகு இருவரும் அவ்வாறாக நடிக்கவில்லை.