ஒரே நாளில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் ஆரம்பம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள தனுஷ், சிவகார்த்தியேன் ஆகியோர் அடுத்து நடிக்கும் அவர்களது படங்கள் இன்று ஒரே நாளில் ஆரம்பமாகி உள்ளன.
'லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் 56வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு மதுரையில் இன்று காலையில் நடைபெற்றது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.
ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத்தில் தனுஷின் படங்கள் குறித்த விவகாரம் பேச்சுவார்த்தையில் இருந்தாலும் அவர் தனது புதிய படத்தை இன்று ஆரம்பித்துவிட்டார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் 27வது படமாக இப்படம் உருவாகிறது.
தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரது அடுத்த படங்களை இயக்கப் போவது யார் என்பது குறித்த குழப்பம் நீடித்து வந்தது. சிவகார்த்திகேயனின் இந்த 27வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படம் பட்ஜெட் காரணமாக டிராப் ஆனதாக சொல்லப்பட்டது. வெங்கட் பிரபுவுக்குப் பதிலாக தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
தனுஷ் நடிக்க, மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம், வெற்றி மாறன் இயக்க உள்ள படம் என சில தகவல்களும் வெளியாகின.
தனுஷின் அடுத்த வெளியீடாக 'ஓம்' படமும், சிவகார்த்திகேயனின் அடுத்த வெளியீடாக 'சேயோன்' படமும் வர உள்ளது. இரண்டு தலைப்புகளுக்கும் கூட ஒரு ஒற்றுமை உள்ளது.