உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாரநாடு கருப்பணசாமிக்கு அரிவாள் சாத்தி படத்தை துவங்கிய தனுஷ் : முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி

மாரநாடு கருப்பணசாமிக்கு அரிவாள் சாத்தி படத்தை துவங்கிய தனுஷ் : முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி

நடிகர் தனுஷ் தற்போது ‛ஓம்' படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‛லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56வது படத்தில் நடிக்கிறார். சில பல தடைகளுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம், மாரநாடு கருப்பணசாமி கோவிலில் இன்று(செப்., 25) துவங்கியது.

தனுஷ் ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, முக்கிய வேடத்தில் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றனர். இத்தனை ஆண்டுகாலத்தில் முதன்முறையாக தனுஷ், வடிவேலு இணைந்து நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனுடன் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் மற்றும் ப்ரிமார்க் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.

“பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற வாசகத்துடன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இதன் கதைக்களம் கருப்பசாமி கடவுளை வைத்து கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கதைக்களம் 80களில் நடக்கும் என தெரிகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அடுத்தாண்டு கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 அடி அரிவாள் காணிக்கை
முன்னதாக இந்த படம் துவங்கும் முன் நடிகர் தனுஷ் சார்பில் கருப்பணசாமிக்கு 18 அடி உயரத்தில் அரிவாள் சாத்தப்பட்டது.

கோவிலில் சலசலப்பு
படத்தின் துவக்க விழா கோவிலில் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் சினிமா கேமராவை வைத்து படம் பிடித்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் படக்குழுவினர் மறுத்தனர். இதனால் கோவில் ஊழியர், படக்குழுவினர் இடையே லேசான வாக்குவாதம் நடந்ததால் அங்கு சலசலப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !