பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே இயக்குனருக்காக காத்திருந்த விக்ரம்
தமிழ் சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான ஸ்ரீதர் பல வெள்ளி விழா படங்களை தந்தவர். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். யதார்த்த சினிமாவின் முன்னோடியாக கருதப்படுகிறவர். புதிய தலைமுறைகளின் வருகைக்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். என்றாலும் தன்னால் இந்தக்காலத்துக்கு (1990கள்) ஏற்ற வகையிலும் படம் எடுக்க முடியும் என்று காட்டுவதற்காக அவர் தயாரித்து இயக்கிய படம்தான் 'தந்துவிட்டேன் என்னை'.
இது அவரது கடைசி படம் என்பதால் 'சினிமாவிற்கு என்னை தந்துவிட்டேன்' என்று பொருள்படும்படியான தலைப்பு வைத்திருந்தார். இந்த படத்தில் புதுமுகங்களை நடிக்க வைத்து வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்று நினைத்தார். இதற்காக அவர் புதுமுகங்களை தேடி வந்தார்.
இந்த நிலையில்தான் விக்ரம் 'என் காதல் கண்மணி' என்ற தனது அறிமுக படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். என்றாலும் ஸ்ரீதர் படத்தில் நடிக்க ஆர்வம் கொண்ட அவர் தான் ஏற்கெனவே நடித்து வருவதை மறைத்து ஆடிசனலில் கலந்து கொண்டு தேர்வானார்.
இது இளமையான காதல் கதை, ரோகினி, ரவிச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தனர். ஸ்ரீதேரின் வேண்டுகோளுக்காக பாரதிராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்தார். என்றாலும் ஸ்ரீதரின் உடல்நிலை காரணமாக படம் தாமதமானதால் விக்ரமின் முதல் படமாக 'என் காதல் கண்மணி' வெளியானது.