'பத்தா' 80ஸ் குடும்பஸ்தன் கதை: இயக்குனர் பாலாஜி தரணிதரன்
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியை இயக்கி வருகிறார் பாலாஜி தரணிதரன். படம் பெயர் 'பத்தா'. லிஜோ மோல் ஜோஸ், 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர், அர்ஜூன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து பாலாஜி தரணிதரன் கூறியிருப்பதாவது: செல்போனும், சமூக வலைதளங்களும் இல்லாத 80களில் நடக்கிற கதை. காரணம் இரண்டுமே சமூகத்தின் நிஜமான முத்தை மறைத்து விட்டது. அதனால் 80ஸ் காலகட்டத்தில் கதை நடக்கிறது. பாதி கதையை எழுதியிருந்த நிலையிலேயே இந்த கதையை முடி, ஷூட்டிங் போகலாம் என்றார் விஜய்சேதுபதி, அவரே தயாரிப்பாளர் அட்லியையும் அறிமுகப்படுத்தினார்.
1980களில் திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்தேன். அங்கு நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்கள்தான் படத்தின் கதை. 'பத்தா' என்பது ஒருவனின் பெயர். அவனுடைய முழுப்பெயர் வேறு. சில கதைகள் தானாக உருவாகும். சில கதைகள் சம்பந்தமே இல்லாமல் அதிரடியாக முன்னே வந்து நிற்கும். 'ஆஹா இப்படி வந்திருக்கே என்று நினைக்கும்போது அதுவே அருமையாக அமைந்துவிடும் அப்படியான கதை இது. ஒரு கதையைச் சொல்லும்போது அதில் நம்பகத்தன்மையும், வாழ்க்கையுடனான தொடர்பும் இருக்க வேண்டும். அதேநேரம், ஆர்வமாகக் கேட்கத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துச் செய்திருக்கிறேன்.
எல்லோரும் பிறக்கும்போது அப்பாவியாகவே பிறக்கிறோம். எங்கோ ஓரிடத்தில் திசை மாறி, இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறார்கள். நாமெல்லாம் குழந்தையாக இருக்கும்போது குழந்தைதானே குழந்தையை ரசிக்காமல் இருக்க முடியுமா. அந்த அப்பாவித்தனம் எங்கோ தவறிய பின்பு, வாழ்வில் ஏதோ திரும்பி நடந்து, முன்பிருந்த அந்த அப்பாவித்தனம் திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படம். இவ்வாறு அவர் கூறினார்.